கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விவசாய சங்கம், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை கேட்ட முதல்வர்

Loading

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து 1.2.2023 மற்றும் 2.2.2023 ஆகிய தேதிகளில்  வேலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக  நேற்று சேலத்திற்கு வருகை தந்த முதலமைச்சர், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம், லாரி கட்டுமான தொழில் நிறுவனங்கள் சங்கம், ஆயத்த ஆடைகள் உற்பத்தியாளர்கள் சங்கம், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கம், மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் சங்கம், விவசாயிகள் சங்கம்,  உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சங்கம், சிறுதானிய மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கம், மலையகப் பகுதி பழங்குடி மக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.  இந்த கலந்துரையாடலின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக அரசு அளித்து வரும் அதரவு மற்றும் சலுகைகளுக்கு தங்களது நன்றிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டனர். மேலும், சேலம் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கத்திற்கு தனி அலுவலகம், பயிற்சி மற்றும் கூட்ட அரங்கம் அமைத்திட ஏதுவாக இடஒதுக்கீடு மற்றும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளுக்கான Peak Hour Charge மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.ஓசூர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் ஓசூரில் விமான நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். விவசாய சங்கங்களின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் தென்னை ஆராய்ச்சி மையம் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை தொடங்கிட வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான தொடர்பு ஏற்படுத்த தேசிய அளவில் வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்புக் கூட்டம் நடத்திட உதவி செய்திட வேண்டும் என்றும், முதல்நிலை சிறுதானியம் பதப்படுத்தும் மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்து தர வேண்டும் என்றும், வேளாண்மை தொடர்பான செய்திகளுக்காக “விவசாயிகள் பண்பலை” நிலையம் அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் தோல், நார் போன்ற கழிவுகளைக் கொண்டு இயற்கை எரிவாயு ஆலை அமைத்து தர வேண்டும் என்றும், ஏற்றுமதி மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாம்பழ சாகுபடிக்கான தனித்துறையை உருவாக்கி தர வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ரொக்க கடன் வட்டி மானியம் அளித்திடவும், சேகோ மற்றும் ஸ்டார்ச்க்கு குறைபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும், மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிக்க சேகோசர்வ் மூலம் ஆராய்ச்சிக்கூடம் அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.அனைத்து மாவட்ட அனைத்து பாடி பில்டர்கள் சம்மேளத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட லாரி பாடி கட்டும் தொழிற்பேட்டையில் தொழில் துவங்குவதற்கு ஏதுவாக அனைத்து தொழிலங்களுக்கும் ஒரே வடிவமைப்பில் ஷெட் அமைக்கவும், தொழில் செய்ய உபகரணங்கள் வழங்கவும் நிதியுதவி அளித்திட வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மலையகப் பகுதி பழங்குடி மக்கள் சார்பில் தங்கள் பகுதியில் சாலை வசதிகள் மற்றும் கால்நடை மருத்துவமனை வசதிகள் செய்து தர வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்தனர்.  பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதற்காக மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்களது நன்றியை தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மேலும் இத்தகைய நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *