தெலுங்கில் திறமையை மதிக்கிறார்கள் – வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கொன்றால் பாவம்’. கன்னடத்தில் 18 படங்களை இயக்கியுள்ள, விழுப்புரத்தைச் சேர்ந்த தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ச் 3- ல் வெளியாகும் படம் பற்றி வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:
இதில், மல்லிகா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். ஒரே வீட்டில், ஒரு நாள் நடக்கும் கதையை கொண்ட த்ரில்லர் படம். 1980ல் நடக்கும் கதை என்றாலும், எந்த காலத்துக்கும் பொருத்தமான திரைக்கதை. கன்னடத்தில் ஹிட்டான படம் இது. தமிழிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். தெலுங்குப் படங்களில் அதிகம் நடித்துவருகிறேன். தமிழில், நான் அறிமுகமான ‘போடா போடி’ 2012ல் வெளியானது. தெலுங்கில் நான் நடித்த ‘கிராக்’ படம் 2022ல் வெளியானது. அந்த ஒரே வருடத்தில் தெலுங்கில் கிடைத்த வரவேற்பு, தமிழில் எனக்கு கிடைக்கவில்லை. அங்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சம்பள விஷயத்தில் அவர்கள் பேரம் பேசுவதில்லை. திறமைக்கான மரியாதையைக் கொடுக்கிறார்கள். நான் இருந்தால் படம் வரவேற்பைப் பெறுவதாக நம்புகிறார்கள்.
‘கொன்றால் பாவம்’ படத்துக்குப் பிறகு தமிழிலும் எனக்கு அப்படி மரியாதை கிடைக்கும் என்று நம்புகிறேன். வில்லியாக நடித்துக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில்தான் நடிக்கிறேன். ஒரே சாயல் கொண்ட பாத்திரங்களில் நடிக்கவில்லை. இதே டீமுடன் மேலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதன் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.
இவ்வாறு வரலட்சுமி சரத் குமார் கூறினார்.