வேஷம் போடும் அதிகாரிகள் – மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் போட தயாராகும் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்

Loading

தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 20.10.1986லிருந்து புது மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நெல்லையில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கினார். தொடக்கத்தில் இதற்கு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்றே பெயரிடப்பட்டது. பின்பு 1997 முதல் இது தூத்துக்குடி மாவட்டம் என பெயர் பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்து விட்டன. அப்போது, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் என 7 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தற்போது தேர்தல் ஆணையம் மறு சீராய்வு மூலம் வரையறுக்கப்பட்ட பட்டியலின்படி சாத்தான்குளம் தொகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டு 6 தொகுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஊடகத்துறையை பொறுத்தவரையில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனார், அவரது மகன்கள் இராமசந்திர ஆதித்தன், சிவந்தி ஆதித்தன் மற்றும் கே.பி.கந்தசாமி போன்றவர்கள் நாளிதழ்களை தொடங்கி முன்னோடியாக இருந்து தமிழ் மொழிக்கு புகழ்சேர்த்தவர்கள். இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு அரசின் சார்பில் வீட்டுமனை, குறைந்த வாடகையில் அரசு குடியிருப்பு வீடு வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல மாவட்டங்களில் பல கட்டங்களாக வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் குறைந்த வாடகையில் அரசு குடியிருப்பு கட்டிடங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 36 ஆண்டு காலத்தில் இந்த 2 திட்டங்களுமே நடைமுறைப் படுத்தவில்லை. 2015-ல் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வீட்டுமனை வழங்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு  வழங்கினர். அதன் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட சேர்வைக்காரன் மடம் ஊராட்சியில் அரசின் சார்பில் மனை நிலம் ஒதுக்கப்பட்டது. அதன் முன்பகுதி தனியாருக்கு சொந்தமான பட்டா இடம் இருந்தது. அதை அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கூறியதையடுத்து தனிநபர் வைத்திருந்த அந்த இடத்தை சம்பந்தப்பட்டவரிடம் அப்போதைய பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணை தலைவர் ராஜேஷ், இணைச் செயலாளர் ஜாய்சன் ஆகியோர் சுமூக பேச்சுவார்;த்தை மூலம் தீர்வு கண்டு, 2020 பிப்ரவரி 12ம் தேதி புதுக்கோட்டை பத்திரபதிவாளர் அலுவலகத்தில் தமிழக ஆளுநர் பெயரில் பத்திரபதிவு செய்யப்பட்டது. அப்போது கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரி வசம் ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகை தந்த போது, அவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பல கட்டங்களாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டும் பணி முடிவு பெறாத நிலையே நீடித்து வந்தது. 2021ம் வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கலெக்டர், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடமும் வீட்டுமனை சம்பந்தமாக கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். இதேபோல், தூத்துக்குடி முத்துநகர் பிரஸ்கிளப் தலைவர் ராஜா,  பத்திரிகையாளர்கள் சங்க தூத்துக்குடி தலைவர் முருகன், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் வீட்டுமனை சம்பந்தமாக தமிழக முதல்வர் ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரிடம் மனுக்களாக வழங்கப்பட்டு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *