திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தைப்பூசத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமான திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தைப்பூசத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஐந்து புள்ளி மண்டபத்தில் எழுந்தருளிய திருமலைக்குமாரசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மாலை 6.30 மணியளவில் அருள்மிகு நகரீஸ்வரமுடையார் திருக்கோவில் கீழ ரத வீதியை வந்தடைந்தார். கீழ ரதவீதீயில் அன்னக்கொடி ஏற்றப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு தந்தப் பல்லக்கில் திருமலைக்குமாரசாமி திருவீதி உலா நடைபெற்றது. திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தலைமை அர்ச்சகர் திருமேனிநாத பட்டர் (எ) ரமேஷ் பட்டர் மற்றும் வீரபாகு பட்டர், ராஜா பட்டர் ஆகியோர் திருமலைக்குமாரசாமிக்கு அபிஷேக ஆராதனைகளை நடத்தினர். மண்டகப்படிதாரர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். அச்சன்புதூர் காவல் நிலைய காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.