பெண்களின் உயர்கல்விக்கு கைகொடுக்கும் “புதுமைப் பெண் திட்டம்”
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் பெற்று சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மகளிர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்த அரசு பரிவுடன் செயல்படுத்தும் திட்டங்களுக்கு அடையாளமாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை” என மாற்றம் செய்துள்ளது. இத்துறையின் மூலம் பெண்கள். குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் ஆகியோர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்கல்வியை போற்றும் விதமாகவும். உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும். மருத்துவராகவும்,பொறியாளராகவும் , படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், உருவாக அடித்தளமாக “புதுமைப் பெண் என்னும் உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.இத்திட்டத்தி ன் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து. பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச்சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல். பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும். மாணவிகள் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். அந்த வகையில், முதற்கட்டமாக 67,000 கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தில்லி முதலமைச்சர் ஆகியோர். சென்னையில் 05.09.2022-அன்று 2.500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய “புதுமைப் பெண்” பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 2,901 கல்லூரி மாணவியர்கள் முதற்கட்டமாக மாதந்தோறும் தலா ரூபாய் 1,000 உதவித்தொகை பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து விண்ணப்பிக்கும் தகுதியான மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது. வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. கல்வி என்னும் நிரந்தர சொத்தினை பெண்கள் அனைவரும் பெற்றிட வேண்டும் என்ற பெண்ணுரிமை கொள்கையின் மறு உருவமாகவும். பெண் சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வலிமையான பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும் இப்புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறும் செல்வி.தெ.நிவேதா அவர்கள் தெரிவித்ததாவது:- நான் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை பெயர் தெய்வேந்திரன், விவசாயம் செய்து வருகிறார். நான் அலங்காநல்லூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தேன்; எனது பெற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் என்னை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம். அதன்படி, மதுரை யாதவா கல்லூரியில் பி.எஸ்.சி.கணிதம் பாடப்பிரிவை தேர்வு செய்து தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்னைப்போன்ற ஏழை. எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவியர்களின் கல்லூரி கனவை நனவாக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நான் விண்ணப்பித்தேன். அதன்படி, கடந்த மாதம் தொடங்கி எனது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் என்னுடைய படிப்பு செலவிற்காக எனது பெற்றோரின் சுமை குறையும். இத்திட்டத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னைப் போன்ற கிராமப்புற மாணவியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறும் செல்வி.மா.பிரபா அவர்கள் தெரிவித்ததாவது:- நான் மதுரை மாவட்டம் பேரையூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். என் தந்தையின் பெயர் மாதவன். விவசாயம் செய்து வருகிறார். நான் பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தேன். நான் அரசு பணியில் சேர்வதே என்னுடைய இலட்சியமாகக் கொண்டு படித்து வருகிறேன். நான் தற்போது எழுமலையில் உள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் பாடப்பிரிவை தேர்வு செய்து மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது கல்வி செலவிற்காக எனது பெற்றோர் மிகவும சிரமப்பட்டு என்ணை படிக்க வைக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்கள் 12-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடாமல் அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று படிக்க ஏதுவாக புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த உதவித்தொகை எனது படிப்பு செலவிற்கு மிகவும் உதவியாக உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்