தமிழக கவர்னர் மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.

Loading

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு,  தமிழக கவர்னர்  சென்னை, காமராஜர் சாலை-வாலஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்ஆணையாளர்  சங்கர்ஜிவால்   உத்தர வின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் டி.எஎஸ்.அன்பு   (வடக்கு),  பிரேம்ஆனந்தசின்கா  (தெற்கு),  கபில்குமார்சிசரத்கர்  (போக்குவரத்து) ஆகியோரின் அறிவுரையின் பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல்சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுதவிர சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்களை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம்,  சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின், காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள், வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்புபடை   பிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு  25-ம் தேதி  மற்றும் 26-ம் தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் டிரோன்கள்   மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள்   பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது.
சென்னை பெருநகர காவல் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *