ஈரோட்டில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படாது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Loading

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.
இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடைத்தேர்தலின்போதும் பதட்டம் நிறைந்த பகுதிகளை வரையறுப்பது வழக்கமாகும், அதே போல் ஈரோடு தொகுதியில் பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளை கண்டறிய மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறேன். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். தற்போது முதல் கட்ட அளவில் பதட்டம் நிறைந்த பகுதிகள் குறித்த விவரங்களை கேட்டிருக்கிறேன். தேர்தலுக்கான செலவினங்களுக்கு நிதித்துறையின் ஒப்புதல் பெற வேண்டும், இதற்காக, தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக முடிக்கப்படும். கடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது கொரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது. அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் 2-ஆகப் பிரிக்கப்பட்டது.ஒரே வளாகத்தில் துணை வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டு, ஒரு வாக்குச்சாவடியில் 600 வாக்காளர்களும், மற்றொரு வாக்குச்சாவடியிலும் 600 வாக்காளர்களும் என்ற அளவில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து இயல்பான நிலை திரும்பியுள்ளது, இதைக் கருத்தில் கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா காலத்தில் இருந்ததைவிட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும், தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும். அதன்படி தேர்தல் செலவும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *