டிராவல்ஸ் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை,ரூ.9 லட்சம் கொள்ளை
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் எஸ்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளர் குமார் (44). இவரது மனைவி வாணி. இவர்களுக்கு யோகேஷ், மனோஜ் என 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் யோகேஷ் பூந்தமல்லியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறான். அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பில் படிக்க இருப்பதால் பூந்தமல்லிக்கு சென்று வருவதில் சிரமம் இருப்பதால் பூந்தமல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து பால் காய்ச்சுவதற்காக நேற்று குடும்பத்துடன் குமார் சென்றுள்ளார் .இந்நிலையில் இன்று காலை குமாரின் சகோதரர் முரளி என்பவர் எதேச்சையாக வீட்டுப் பக்கம் வந்து பார்த்த போது வீட்டின் கேட் திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டதும் உடனடியாக சகோதரர் குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து குமார் விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து குமார் மணவாளநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய், மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மகன் படிப்புக்காக பூந்தமல்லியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பால் காய்ச்சுவதற்காக நேற்று குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்களின் கைவரிசை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.