சகுந்தலாம்மாள் நினைவு 12-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகளின் பரிசளிப்பு விழா :
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தெய்வத்திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 12-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகளின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவினை தமிழ் ஆசிரியர்கள் பிரபு, வனிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.தமிழ் ஆசிரியர் எபினேசர் அனைவரையும் வரவேற்றார்.பள்ளியின் முதல்வர் டாக்டர் ஸ்டெல்லா ஜோசப் தலைமை தாங்கி 12 ஆண்டுகளாய் இப் போட்டிகள் சிறப்பாய் நடைபெறும் விதம் குறித்தும், நவ நாகரிக உலகில் தமிழின் முக்கியத்துவம் குறித்தும்மாணவர்களால் வருங்கால தமிழகம் வளம் பட வேண்டும் என்பதைக் குறித்தும் வாழ்த்துரை வழங்கினார்
திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, பொன்னேரி போன்ற கல்வி மாவட்டங்களைச் சார்ந்த 2856 மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்த உலகச் சாதனை தமிழ் வளர்ச்சிப் போட்டியில், வெற்றி பெற்ற அனைத்து சாதனையாளர்களுக்கும் ரூ.1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பரிசுத் தொகையினை ஸ்ரீ நிகேதன் பள்ளி நிர்வாகம் வழங்கியது. விழாவில் ஸ்பாரோ இலக்கிய விருத்தாளரும் தமிழறிஞர், படைப்பாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலகச் சாதனை தமிழ் வளர்ச்சிப் போட்டிகளில் பங்கெடுத்த மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாதனைச் சான்றிதழும், பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கேடயமும்,திருக்குறள் புத்தகங்களும் வழங்கி பாராட்டினார்.தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற்றும், பெரியோர்களை மதித்து நடக்கும் நற்பண்பும் ஒரு மாணவனை மிகச் சிறந்த மனிதனாக்கும் என்று எடுத்துரைத்தார். தாய்மொழி,தாய் நாடு இவை இரண்டும் நமது இரு கண்கள். கண்களை இமை காப்பது போல,நம் தாய் மொழியையும், தாய் நாட்டையும் நாம் காக்க வேண்டும் என்றும், ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமம் நடத்தும் ,இப் போட்டியைப் போல ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ,தமிழ்ப் போட்டிகள் நடத்தி, தமிழ் மொழியின் சிறப்பை மேலும் உயர்த்த வேண்டும், உலகம் முழுவதும் இத்தமிழ் வளர்ச்சிப் போட்டி, பெயர் சொல்லும் அளவிற்கு,வரும் காலத்தில் விளங்கும் என்று தனது வாழ்த்துக்களை மனம் உவந்து எடுத்துரைத்தார்.பின்னர் மாணவர்களுக்கு,கலாம் உலகச் சாதனைக்கான பாராட்டுச் சான்றிதழும், புத்தகங்களும் வழங்கப்பட்டன.தங்களது கடமையை செய்த ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு பள்ளித்துணை முதல்வர், தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து, ஸ்ரீ நிகேதன் பள்ளி குழுமம் என்றும் தாய் மொழியையும் தாய் நாட்டையும் வளர்க்கும் நோக்குடன் செயல்படும் என பள்ளி தாளாளர் விஷ்ணு சரண்,பள்ளி இயக்குனர் பரணிதரன் ஆகியோர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.விழாவில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் 300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களும் இப்பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.இறுதியில் தமிழ் ஆசிரியர் தரணி நன்றி கூறினார்.