புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவள்ளூர் ஜன 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தியும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். இந்த போகிப் பண்டிகையில் பழைய பொருட்களை எரிப்பது என்பது பழையன கழிதல் என்ற முறையில் முந்தைய கால கட்டங்களிலிருந்தே இருந்து வந்த வழக்கமாகும்.திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் இந்த மாதிரி பொருட்கள் எரிக்கும்போது பெரிய அளவுக்கு காற்று மாசு ஏற்படுகிறது. இதனை தடை செய்யும் பொருட்டு மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புகையில்லா போகி என்ற முறையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்முன்னதாக, இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நடைபெற்ற புகையில்லா போகி விழ்ப்புணர்வு நிகழ்வுகளில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் வகையில் அமைக்கப்பட்ட மூன்று விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து, வழியனுப்பி வைத்தார்.அதனைத் தொடர்ந்து காலியான தண்ணீர் பாட்டில்கள், கேன்கள், நெகிழும் தன்மை உள்ள பிளாஸ்டிக் தாள்கள் ஆகியன பொது குப்பையில் சேர்ந்து சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிப்பதை தடுக்கும் பொருட்டு அவற்றை மறு சுழற்சி செய்யும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் Hindustan Coca – Cola Beverages Private Limited –ன் சமூக பங்களிப்பு நிதி ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வழங்கப்பட்ட மறு சுழற்சி இயந்திரத்தை அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, அதனை பயன்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உதவி பொறியாளர்கள் கி.ரகுகுமார்,சு.சபரிநாதன், தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.