இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆபரணக் கற்கள் & நகைகள் முதல் ஏற்றுமதி கொடியசைத்து துவக்கி வைப்பு

Loading

இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிக ஒப்பந்தத்தின் கீழ் நாட்டின் பல்வேறு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வாயிலாக முதல் ஏற்றுமதி இன்று கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து நகைகள் மற்றும் ஆபரணக் கற்கள் ஆஸ்திரேலியாவிற்கு முதன் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வை அயல் வர்த்தக பொது இயக்குனரக மண்டல கூடுதல் இயக்குனர் திருமதி. ராஜலட்சுமி தேவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார தடைகளை நீக்குவதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. சுங்கத்தீர்வை அல்லாத உடனடி நடவடிக்கைகள் மூலம் இந்தியர்களின் ஏற்றுமதிக்கான போட்டித்திறன் மற்றும் அதிகளவிலான பங்குச்சந்தை அதிகரிக்கும் என அவர் கூறினார். இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் ஏற்றுமதி அதிகரிப்பதோடு இந்திய உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு உழைப்பு மிகுந்த துறைகளுக்கான அதிக பலனை தருகிறது என்று தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், விமான சரக்கு சுங்கவரி கூடுதல் ஆணையர் திரு.மகேந்திர வர்மா, துணை ஆணையர் திரு.ஏ.வி.நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதே போல எண்ணூர் அதானி கண்டெய்னர் கையாளும் துறைமுகத்திலிருந்து செயின்ட் கோபைன் நிறுவனத்தின் உள் அலங்கார கண்ணாடிகள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வை அயல் வர்த்தக பொது இயக்குனரக மண்டல இணை இயக்குனர் திரு.பி.என்.விஸ்வாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டிலிருந்து நகைகள் மட்டுமல்லாது தோல் மற்றும் தோல் அல்லாத செருப்புகள், கைவினைப் பொருட்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், பொறியியல் தயாரிப்புகள் ஆகியவை ஏற்றுமதி சந்தையில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி அளவு இந்த வருடத்தில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் சென்னை சுங்கவரி கூடுதல் ஆணையர் திரு.பாலாஜி, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் திரு. இஸ்ரார் அகமது, செயின்ட் கோபைன் நிறுவன மேலாண் இயக்குனர் திரு.உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *