திருத்தணியில் சுற்றித்திரிந்த யாசகர்களை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த காவல் எஸ்.ஐ.,ராக்கிகுமாரி
திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத்திகழும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. கோயில் நகரமான திருத்தணிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் என ஏராளமானோர் திருத்தணி நகரில் பேருந்து நிலையம் ரயில்வே ஸ்டேஷன் மலைக்கோயில் மற்றும் திருக்கோயில் ஆகிய பகுதிகளில் யாசகம் செய்து உயிர் வாழ்ந்து வருகின்றனர். இது போன்று சுற்றி திரிந்தவர்களை திருத்தணி சட்டம் ஒழுங்கு எஸ்ஐ., ராக்கி குமாரி கண்டுபிடித்தார். இதையடுத்து 4 பெண்கள் உள்பட 22 யாசகர்களை மீட்டு திருத்தணி முருகப்ப நகர் பகுதியில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தார்.
அவர்களுக்கு தேவையான துணிமணிகள் சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்தார். மேலும் இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உபயோகப் பொருட்களையும் எஸ்ஐ ராக்கி குமாரி வாங்கி கொடுத்ததால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட 22 பேரும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.