ஆவாஜிபேட்டையில் கை உருளை போன்ற வெடிகுண்டு கண்டெடுப்பு .
திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவாஜிபேட்டையில் குப்பன் என்பவர் தனது மாட்டை கட்டுவதற்காக குடியிருப்புகளுக்கு அருகே உள்ள காலி மைதானத்தில் கொம்பு நடுவதற்கு குழி தோண்டிய போது சுமார் ஒரு மீட்டர் அளவு கொண்ட கை உருளை குண்டு தென்பட்டுள்ளது. இதை அடுத்து பெரியபாளையம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த கை உருளை வெடிகுண்டை சுற்றி குழி தோண்டப்பட்டு மணல் மூட்டைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த பின் அதன் தன்மை அறியப்பட்டு பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் நேற்று இதே போல் ஆவாஜிபேட்டை அருகே உள்ள மாளந்தூர் பகுதியில் 100 நாள் வேலை செய்யும் போது பூமிக்கு அடியில் ராக்கெட் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இப்பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் ஆழ்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதிகளை முழுவதுமாக சோதனை செய்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.