31 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 217 ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடந்தது.
சென்னையில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் 31 மணப்பெண்களுக்கு மணமகன்கள் தாலி கட்டினார்கள். அவர்களுக்கு தாய் வீட்டு சீதனம் போல் பீரோ, கட்டில், தலையணை, குடும்பம் நடத்த வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள் ரூ.72 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டன. புதிதாக வாழ்க்கையில் இணைந்த மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணம் இல்லாத திருமணத்தை நடத்தி வைக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது. பல மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நள்ளிரவில் வந்து தூங்குவது போல ஒரு தூக்கத்தை தூங்கிவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் நேற்று ஏற்பட்ட களைப்புகள் எல்லாம் நீங்கி போய் விட்டன. இந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு பற்றி பல இடங்களில் பேசும்போது பல்வேறு நேரங்களில் அவர் செயல் பாபு என்று கூறியிருக்கிறேன். அதை அவர் தொடர்ந்து நிலைநிறுத்தி கொண்டு இருக்கிறார்.
இங்குள்ள அமைச்சர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. ஒரு முதலமைச்சர் தான் அமைச்சர்களை வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம். ஆனால் சேகர்பாபு முதலமைச்சரையே வேலை வாங்குகிறார். நாடு பயன் அடைவதற்காகவும், மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் பணிகளை செய்யக்கூறுகிறார். அவர் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். உலக வரலாற்றில் இந்து சமய அறநிலையத் துறையில் இப்படி ஒரு சாதனை நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியாக சொல்வேன்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது இத்துறை சார்பில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது. 47 கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமம் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் பல கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய திட்டமிட்டுள்ளோம். பெண் ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு உள்ளார். கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பெரியாரின் சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். சமத்துவத்தை விரும்பாத சில சக்திகளை சட்ட போராட்டம் நடத்தி விரட்டி வருகிறோம். 1½ ஆண்டு கால ஆட்சியில் அவர் பல சாதனைகளை செய்து வருவதால் தான் அவரை சேகர்பாபு அல்ல செயல் பாபு என்று சொல்கிறேன். இதையெல்லாம் சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அரசியல் செய்ய எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
அண்ணா வழியில் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் நேற்று ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 இணையர்களுக்கு மண விழா நடத்தி இருக்கிறோம். மன்னராட்சியாக இருந்தாலும் சரி, மக்களாட்சியாக இருந்தாலும் சரி கோவில் என்பது மக்களுக்கு தான். தனிப்பட்ட சிலரின் சொத்து அல்ல. அதை நடைமுறைப்படுத்ததான் நீதிக்கட்சியின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அதிகளவில் கோவில்களுக்கு குட முழுக்கு நடத்தியது கலைஞரின் ஆட்சியில்தான். பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. அந்த வழியில் இந்த அரசு திராவிட மாடல் சாதனையை செய்து கொண்டு இருக்கிறது. கோவில் சீரமைப்பு பணிகள் சிறப்பாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் அமைச்சர் சேகர்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், அசன் மவுலானா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சந்திரமோகன், குமரகுருபரன், கண்ணன், அறங்காவலர் குழுத் தலைவர் கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.