தன்னார்வ ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம்..

Loading

பள்ளி மாணவ மாணவியர் இடைநிற்றல் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் தூத்துக்குடியில் நீம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்றது.
உருவாகுவோம்; உருவாக்குவோம் என்னும் விருதுவாக்குடன் இயங்கிவரும் நீம் பவுண்டேசன் சார்பில் தன்னார்வ ஆசிரியர்களுக்கு பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாணவர் இடை நிற்றல் குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிற்சி தூத்துக்குடி திரேஸ்புரம் சிறுமலர் ஆர் சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் தலைமைப் பண்பினை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்து இந்திய அரசமைப்புக் கல்வி பயிற்றுவித்து வரும் நீம் பவுண்டேசன் தன்னார்வ ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஒரு நாள் கருத்தமர்வில் நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின்  ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்தும் அதன் களப் பணியாளர் ஹெப்சிபா விளக்கினார்.
பின்னர் கல்வித்துறை சார் சொல்லாடல்கள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் குறித்தும் பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்திடவும் மாணவர் இடை நிற்றலை குறைக்கும் யுக்திகள் குறித்தும் தூத்துக்குடி மாவட்ட கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் விளக்கினார்.
தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களில் தூத்துக்குடி ரெங்கநாதபுரம் சி எம் மேல்நிலைப் பள்ளியில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு  சரளமாக வாசிக்கவும் எழுதவும் சிறப்பு பயிற்சி தந்து உருவாக்கிய நீம் தன்னார்வ ஆசிரியை  மகேஸ்வரி பேசுகையில் எழுத வாசிக்க தெரியாது என்ற காரணத்தால் எந்தவொரு மாணவனோ மாணவியோ  பள்ளிப் படிப்பை இடை நிறுத்தம் செய்யும் நிலை இனி இருத்தல் கூடாது என்ற நல்லெண்ணத்தில் நீம் பவுண்டேசன் தன்னார்வ ஆசிரியர்கள் பயிற்றுவித்து சிறப்பாக செயல்பட்டு  வருகிறோம் என பெருமையோடு தனது அனுபவத்தினை பகிர்ந்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட இரயில்வே சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ் சைல்டு லைன் குறித்து விரிவாக விளக்கினார்.
தொடர்ந்து  நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார் பேசுகையில் எழுத்தறிவு தந்தவன் இறைவன் என்னும் மூத்தோர் வாக்கினை உணர்ந்து செயல்பட்டு வரும் நீம் பவுண்டேசன் ஏட்டுக் கல்வியோடு இந்திய அரமைப்புக் உரிமைக் கல்வியைக் குழந்தைகள் பாராளுமன்றத்தின் வழியாக கற்பித்து வருவதாகவும், இந்திய அரசியலமைப்பின் பிரதிநிதித்துவ சட்டப்படி இன்றைய குழந்தைகள் பதினெட்டு வயதில் தங்களது முதல் வாக்கினை பதிவு செய்து தங்களுக்கான பிரதிநிதியை தேர்தெடுக்கும் போது மக்களாட்சி தத்துவத்தை உணர்ந்தவராகவும், மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களாக இருத்தல் வேண்டும் என்ற நோக்கத்தில் அரசமைப்பு கல்வியினை பயிற்றுவித்து வருவதாகவும் கூறினார்.
இறுதியாக தாளமுத்துநகர் ஆர் சி நடுநிலைப் பள்ளி தன்னார்வ ஆசிரியர் இன்னாசி நன்றியுரை கூறினார்.
கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை நீம் தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *