மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .
திருவள்ளூர் டிச 05 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிகத்தூரில் உள்ள நரிக்குறவர் காலனியில் கடந்த 12 வருடங்களாக 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பில் சுடுகாடு,எரிமேடை, குடிநீர் குழாய் அமைத்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் காலம் காலமாக அங்கு மனித உடல்களை எரித்து வந்த நிலையில் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர்கள் அங்கு வாழக்கூடாது, குழந்தைகள் படிக்க கூடாது என்பதற்காக சமூக விரோதிகள் எங்களை மிரட்டி,குடியிருப்பு பகுதியில் சுடுகாடு வைத்து இறந்தவர்களின் உடல்களை எரித்து வருகின்றனர்
இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பயப்படுவது மட்டுமல்லாமல்,புகை கலந்த துர்நாற்றம் அடிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே குடியிருப்பு பகுதியில் சுடுகாடு வைத்து இறந்தவர்களின் உடல்களை எரித்து வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
அப்பொழுது மாவட்ட கலெக்டர் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த அதிகத்தூர் நரிக்குறவ மக்கள் ஆதார் கார்டு,ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து கலெக்டர் இல்லம் வந்த தாசில்தார் மதியழகன் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அதிகத்தூர் கிராமத்தில் உள்ள நரிக்குறவர்களின் குடியிருப்புக்கு அழைத்து சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார்.