திருவள்ளூரில் “சிறகுகள் 100” என்ற திட்டத்தின் மூலம் 100 மாணவ, மாணவிகளின் சுற்றுலா பயணத்திற்கான வாகனங்கள்

Loading

திருவள்ளூர் நவ 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக, அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 100 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையும் வளர்க்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் “சிறகுகள் 100” என்ற திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் 100 மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், பொது வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் மாமல்லபுரம் வரை சென்று வரும் கல்வி சுற்றுலா பயணத்திற்கான வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து, துவக்கி வைத்து பேசினார்.
 திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்தோங்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, அத்தகைய திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவியர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி, அவர்களிடத்தில் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது கல்வியே என்பதனையும், மேலும், போதைப்பொருட்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிறகுகள் 100 என்ற பெயரில் 100 பழங்குடியினர் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுத்து, அந்த மாணாக்கர்களை பலவேறு அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள், உயர் கல்வியைச் சார்ந்த நிறுவனங்கள், ஐஐடி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு அனுபவங்கள் மற்றும் புரிதல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் சிறகுகள் 100 திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 9-ம் வகுப்பு 12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 100 பழங்குடியினர் மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான கல்வி சுற்றுலாவாக மாமல்லபுரம் அழைத்துச் செல்லும் பயணம் துவக்கி வைக்கப்பட்டது என்று கூறினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமண், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பவானி, மாணவ மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
===============================================================================

தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் ஈகோ பார்க்க கூடாது தமிழகத்தின் நன்மை கருதி இணைந்து செயல்பட வேண்டும் : திருவள்ளூர் மாவட்ட  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு :

திருவள்ளூர் நவ 21 : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் பாமகவின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் விஜயன்,  சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பாலா என்கிற பாலயோகி,  மாநில துணைத் தலைவர் வைத்தியலிங்கம்  முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி,  நிர்வாகிகள் துரை ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ்,  குபேந்திரன்  அமைப்புச் செயலாளர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டா பகுதிகளில்  லட்சக்கணக்கான பயிர்கள் சேதமடைந்துள்ளதால் அதற்கு அரசு இழப்பீடு தர வேண்டும்.  பருவ மழைக் காலங்களில் வரும் மழையை சேமிக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி 20 மாநாடு நடைபெறும் நிலையில், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய ஏரிகளை அரசு உருவாக்க வேண்டும்.  சென்னையின் ஒரு மாத தண்ணீர் தேவை 15 டிஎம்சி, 5 ஆண்டுகளில் 30 டிஎம்சி தேவைப்படும், எனவே கூடுதலாக ஏரிகளை உருவாக்க வேண்டும் . இதற்காக தொடர்ந்து யோசனைகளை அரசுக்கு சொல்லி வருவதாகவும்  தெரிவித்தார்.
கொசஸ்தலை ஆற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.  திருவாலங்காடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு முன்பே தடுப்பணை உடைந்து விட்டது. எனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.  பூக்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். திருவள்ளூரில் மருத்துவ கல்லூரி ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். மத்திய அரசு 10% இட ஒதுக்கீடு  பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்தது ஏமாற்றம் எனவும், தமிழகத்தில் மக்களின் மனநிலை மாறியுள்ளது எனவும், 2026-இல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.  அதிமுக தற்போது 4-ஆக பிரிந்து உள்ளது. சாதி, மதம், இனம், மொழியை வைத்து மற்ற கட்சிகள் செயல்படுகின்றன,ஆனால், பாமக அப்படி இல்லை.
வளர்ச்சியை நோக்கி செல்லும் பாமக  செல்கிறது.  2026-இல் பாமகவோடு கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்தார் . தமிழகத்தில் ஆளுநர், முதல்வரும் அரசியல் சாசன பொறுப்புள்ளவர்கள்.   அவர்களுக்குள் ஈகோ இருக்க கூடாது எனவும்,தமிழகத்தின் நன்மை கருதி இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மியால் ஒரு ஆண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.  பாமகவின் அழுத்தத்தால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். 4 ஆண்டுகளில் 80 பேர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்  எனவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவ மழைக்காக வாய்க்கால்களை தூர்வார வேண்டும், மழையால் ஏற்படும் பாதிப்புகளை அளவீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.   ஒவ்வொரு வருவாய் ஒன்றியத்திற்கும் அமைச்சர்களை அனுப்பி பயிர் சேதங்களை கணக்கிட வேண்டும்.  சென்னையில் மழைநீர் வடிகால் உடைத்து மீண்டும் கட்டுகின்றனர். இணைப்பு இல்லாமல் கால்வாய் அமைக்கும் பணியில் தவறு செய்யும் அதிகாரிகளை சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பல ஊர்களில் 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன என செய்தியாளர்களிடம் பேசும் போது  அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக அமைப்புச் செயலாளர் சிவ.கோவிந்தராசு,  பாமக அமைப்பு தலைவர் ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு , மாவட்ட துணைச் செயலாளர் மு.முருகன்,  ஒன்றிய கவுன்சிலர் புஷ்பா முருகன்,  முன்னாள் மாவட்ட செயலாளர் பூபதி மற்றும் நிர்வாகிகள் கண்ணன், குமார்,  நடராஜ், ரமேஷ் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *