திருவேற்காடு நகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகள் : நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
திருவள்ளூர் நவ 06 :
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் வெள்ளத் தடுப்பு பணிகள் முன்கூட்டியே மேற்கொண்டதன் காரணமாக மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வடிகால் பகுதிகளையும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மழைநிர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில் ஆய்வு செய்து செய்தார்.
அதன்படி வடகிழக்கு பருவமழையின் வெள்ளத் தடுப்பு பணிகளாக திருவேற்காடு நகராட்சி, சுந்தர சோழபுரம், ஏழுமலை நகரில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து மோட்டார் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளையும், வேலப்பஞ்சாவடி பகுதியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த தரை பாலம் நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டு மழை நீர் தங்குதடையின்றி செல்லும் வடிகால் பகுதிகளையும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு நிதியின் கீழ் ரூ.4.50 கோடியில் மதிப்பீட்டில் 1500 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டதால் மழைநீர் தேங்க்காமல் உள்ள பகுதிகளையும், வசந்தம் நகர் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு நிதியின் கீழ் ரூ.2.50 கோடியில் மதிப்பீட்டில் 1000 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டதால் மழைநீர் தேங்க்காமல் உள்ள பகுதிகளையும், சரஸ்வதி நகர் பகுதிகளில் ஆவடி மாநகராட்சி சார்பாக போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றி வரும் பணிகளையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில், அராபத் ஏரியில் நீர் வடிகால் பகுதிகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அந்த ஏரியை விரைவில் அகலப்படுத்துவது குறித்து மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வுகளில், நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எம்.சசிகலா, திருவேற்காடு நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, ஆவடி மாநகராட்சி பணி குழு தலைவர் சா.மு.நா.ஆஷிம் ராஜா, திருவேற்காடு நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.