திருவள்ளூரில் பள்ளி மாணவர்களால் கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் கண்காட்சி : திருவள்ளூர் எம்எல்ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்து

Loading

திருவள்ளூர் அக் 30:

திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் பொது மக்களின் பங்களிப்போடு நகரை சுத்தமாக வைத்துக் கொள்வது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் படி நேற்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி சார்பாக கண்காட்சி நேற்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜூ, சுகாதார ஆய்வாளர் சுதர்சன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் வரவேற்றனர். இந்த கண்காட்சியில் 8 நகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், ஒரு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் 10 தனியார், மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் தயாரித்த பொருட்களை அரங்கில் வைத்து காட்சிப் படுத்தினர்.

இந்த கண்காட்சியை திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன்,  மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவியரின் தயாரிப்புகளை பார்வையிட்டனர்.குப்பையிலிருந்து பெறப்படும் பயன்படாத பொருட்களிலிருந்து விளையாட்டு பொம்மைகளாகவும், அலங்காரப் பொருட்களாகவும், வீட்டு உபயோகப் பொருட்களாகவும் தயார் செய்திருந்தனர்.

தண்ணீர் பாட்டில்களால் பூத்தொட்டிகள், பாரிஸ் டவர், வீணான டயர் மூலம் பென்ச், தெர்மோகோல் மூலம் செடிகள் வைப்பதற்கான பொருட்கள் மற்றும் பொம்மைகளை தயாரித்து வைத்திருந்தனர். அதே போல் கத்தி போன்ற ஆயுதங்களில் ஓவியம் வரைந்து அசத்தியிருந்தனர். அதே போல் வீணான காகிதங்கள் மூலம் பொம்மைகள் ஆகியவற்றையும் செய்து அசத்தியிருந்தனர்.

இதனை பார்வையிட்ட எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் பள்ளி மாணவிகளின் படைப்புகளை வெகுவாகப் பாராட்டினர்.   அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் தூய்மைக்கான உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர். அதாவது என் நகரம் என் பெருமை. என் நகரத்தை தூய்மையாகவும்,  சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமை. பொது இடங்களில் குப்பையை கொட்டாமல் இருப்பதே நகரத் தூய்மைக்கான முதற்காரணம் என்பதை நான் நம்புகிறேன்.  நான் பொது இடங்களில் குப்பையை கொட்டமாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன்.  குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் என உறுதியேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகள் மூலம் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள், பாடல்கள்,  நடன நிகழ்ச்சி மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர்கள் டி.கே.பாபு, அயூப் அலி, இந்திரா பரசுராமன், செல்வகுமார்,  தாமஸ் ராஜ்குமார், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எஸ்.சசிகலா நன்றி தெரிவித்தார்.

0Shares

Leave a Reply