புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தீவிரவாத செயல்களின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல், மதத்துடன் சம்பந்தப்படுத்தி ஓட்டு வங்கிக்காக அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தமிழக திராவிட முன்னேற்றக் கழக அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
கோவையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை குறிப்பிட்ட மதத்தின் மத குருவே தீவிரவாதிகளின் மீது தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் சூழ்நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தி வருகிறது.
தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் செயல்களை கட்டுப்படுத்தி அதை முற்றிலுமாக ஒடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ கிளை அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தற்பொழுது அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின்படி மற்ற மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமையின் கிளை அமைக்கப்படும் பொழுது யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் என்.ஐ.ஏ தேசிய புலனாய்வு முகமை அமைக்கப்பட வேண்டும்.
யூனியன் பிரதேசமாக இருப்பதினால் புதுச்சேரி மாநிலத்தில் என்.ஐ.ஏ கிளை அமைப்பதை தவிர்க்கப்படக்கூடாது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு கடற்கரை பகுதிகள் உள்ளடக்கிய பிராந்தியமாக உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல நேரங்களில் நாடே திரும்பிப் பார்க்கும் விதத்தில் அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. சுற்றுலா என்ற பெயரில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தங்கு தடை இன்றி புதுச்சேரியில் தங்குவதும், அவர்களில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் ஒன்றாக உள்ளது. ஆரோவில் போன்ற சர்வதேச நகரம் புதுச்சேரி மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இருப்பதால் அந்நிய நாட்டைச் சேர்ந்த பல தீவிரவாதிகளும் புதுச்சேரியில் தடையின்றி சுற்றி வருகின்றனர். பாஸ்போர்ட் உள்ளவர்களும், பாஸ்போர்ட் இல்லாதவர்களும் எந்த சோதனைகளும் இல்லாததால் சர்வசாதாரணமாக வந்து செல்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட பல அண்டை மாநிலங்களில் தடை செய்யப்பட்ட பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரி மாநிலத்தை அவ்வப்பொழுது தங்களது புகலிடமாக நினைத்து தடையின்றி செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நாம் கடற்கரை பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு கள்ள விசைப்படகு மூலம் நூற்றுக்கணக்கான அகதிகளும் தீவிரவாதிகளும் அனுப்பப்பட்டனர்.
கண்ணுக்குத் தெரியாத தீவிரவாத செயல் புரிபவர்கள் இங்கு சரியான முறையில் கண்காணிக்கப்படுவதில்லை. தற்பொழுது கூட காரைக்கால் பகுதியில் இருந்து சிலரை என்.ஐ.ஏ கைது செய்து உள்ளது.
வெளிநாட்டிலிருந்து கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு இங்கு வந்து தங்கி இருந்த ஒரு கும்பல் கள்ள நோட்டு தயாரித்தும், கள்ள டாலர் நோட்டுகள் தயாரித்தும் அவர்களது பணி முடிந்தவுடன் கள்ள நோட்டு தயாரிக்கும் இயந்திரம், பிரிண்டர், அதற்கான வெள்ளை தாள்கள் ஆகியவற்றை குப்பைத் தொட்டியில் சர்வ சாதாரணமாக வீசிச் சென்றுள்ளனர்.
தேசிய அளவில் பல்வேறு குற்ற செயல்கள் புரிவோர்களின் நடவடிக்கை இங்கு சரியான முறையில் கண்காணிக்கப்படாததால் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமையின் ஒரு அமைப்பை மத்திய அரசு உடனடியாக புதுச்சேரி மாநிலத்தில் அமைக்க வேண்டும். இதில் உள்ள உண்மை நிலையை மாண்புமிகு துணைநிலை ஆளுநர், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் கலந்து பேசி புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசு புதுச்சேரியில் தேசிய புலனாய்வு முகமை அமைக்க வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரியில் உள்ள 10,000 காலி பணியிடங்களில் அரசு தற்போது 2000 பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் பல காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. அதற்கு முன்பு ஒரு உயர்மட்ட குழு அமைத்து தேர்வு முறைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும். தற்போது நடைபெற உள்ள யு.டி.சி. தேர்வு நேர்மையான முறையில் தேர்வு நடைபெறும். பணம் கொடுத்தால் வேலை வாங்கிதருவதாக யாராவது கூறினால் அவர்கள் குறித்து இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும். காவல் துறையினரும் இதுகுறித்து உரிய விசரணைகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைச் செயலாளர் நாகமணி, புதுச்சேரி அண்ணா தொழிற்ச் சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.