திருவள்ளூரில் ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை 18 கிலோ வெள்ளி 63 கிராம் தங்கம் மற்றும் 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றனர்
திருவள்ளூர் அக் 23 :
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வீரராகவர் கோயில் குளம் அருகில் தெற்கு குளக்கரை தெருவில் அமைந்துள்ளது ராகவேந்திரா கோயில். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் கடந்த 2001-ம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இந்நிலையில் வியாழக்கிழமையான நேற்று ராகவேந்திரருக்கு தீப பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு 8.45 மணிக்கு வழக்கம் போல் அர்ச்சகர் ராகவேந்திரன் என்பவர் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருக்கும் பொருட்கள் சிதறிக் கிடப்பதாக அர்ச்சகர் ராகவேந்திரனுக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து வந்து பார்த்த போது வெள்ளி கவசம், வெள்ளி கோமுக தட்டு, கலச சொம்பு, பஞ்சபாத்திரம், வெள்ளி ஆரத்தி தட்டு, வெள்ளி நாணயம், அகல், தீபம், உள்ளிட்ட 18 கிலோ வெள்ளிப் பொருட்களும், 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை மற்றும் 63 கிராம் தங்கம் மற்றும் 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
மேலும் கோயிலில் வைத்திருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கோயில் அர்ச்சகர் ராகவேந்திரன், திருவள்ளூர் டவுன் போலிசில் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்து சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதே பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோயில் அருகில் பூ வியாபாரம் செய்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.