திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியில் புதிய போதை ஒழிப்பு மன்றம்
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியில் புதிய போதை ஒழிப்பு மன்றம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் அக் : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியில் ) புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு மன்றத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் என அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு என்பது ஒரு சவாலாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் நம் சமுதாயத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கக்கூடிய போதைப் பொருட்களை ஒழிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ சமுதாயத்திடம் இது குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், நமது திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளாக நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி போதைப்பொருட்கள் பழக்க வழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து வருகிறோம். அந்த வகையில், இன்றைய தினம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியில் போதை ஒழிப்பு மன்றம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாணவ சமுதாயத்தினர்கள் இதுபோன்ற போதைப் பழக்க வழக்கங்களுக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ளாமல் எதிர்கால வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்துடன் கல்வி கற்பதே சிந்தனையாக கொண்டு செயல்பட வேண்டும். இந்த பருவத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும். நல்ல முடிவுகள் நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரும்;. தவறான முடிவுகள் உங்கள் வாழ்வை அழித்து விடும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய போதை பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டால் இதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதனை உணர்ந்தும், உடற் நலத்திற்கும், மன நலத்தினையும் கெடுத்து எதிர்கால வாழ்வை அழித்திடும், இத்தகைய போதைப் பொருட்களை ஒழித்திட வேண்டும். மேலும், இதன் பயன்பாடு குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெ.ஹஸ்வத்பேகம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி முதல்வர் சி.பூரண சந்திரன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.