சென்னை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பரபரப்பு பேச்சு

Loading

இந்தியை எந்த வழியில் கொண்டு வர நினைத்தாலும்

நாங்கள் சொல்லும் சொல், “ இந்தி தெரியாது போடா

சென்னை,

தமிழ்நாட்டில் இந்தியை எந்த வழியில் கொண்டுவர நினைத்தாலும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” என்பது தான்.என்று உதயநிதி பேசினார்

இந்தி திணிப்பு, கல்வி நிறுவனங்களில் ஒரே பொது நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய , மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன் “அமித்ஷாவே உங்கள் தாய்மொழி என்ன இந்தியா? குஜராத்தி மீது உங்களுக்கு பற்று இல்லையா?இந்தியாவிலேயே முன்னணியில் உள்ள மாநிலங்கள் இந்தி பேசாதா மாநிலங்கள் தான்…இந்தியை இங்கே கொண்டு வந்து பாருங்கள். தைரியமிருந்தால் ஐஐடியில் இந்தியை கொண்டு வந்து பாருங்கள்…உங்கள் பருப்பு இங்கு வேகாது”, என்றார்.

பின்னர் கண்டன உரையாற்றிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் மொழி, கல்வி உரிமையை பறிக்கும் பாசிச அரசாக பாஜக இருக்கிறது. ஒன்றிய பிரதமர் என்று சொன்னால் பிரதமருக்கு கோபம் வருகிறது. எனவே ஒன்றிய பிரதமர் என்றே சொல்வோம். மோடி அவர்களே இங்கு அதிமுக ஆட்சி நடக்கவில்லை. தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வமோ , பழனிச்சாமியோ அல்ல. தமிழகத்தை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.இந்தி திணிப்புக்கு எதிரான எங்கள்  ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுவது என்பது பாஜக கையில் தான் இருக்கிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பை ஒருபோதும் திமுகவினர் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இந்தியை எந்த வழியில் கொண்டுவர நினைத்தாலும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” என்பது தான். மூன்று  மொழிப்போரை திமுக சந்தித்தது. கடைசியாக நடந்த மொழிப்போரில் மாணவர் அணியினர் தீவிரமாக பங்கேற்றனர். மாணவர் அணி , இளைஞர் அணியினர்  தீவிரமாக மீண்டும் போராடி இந்தி எதிர்ப்பு போரில் வெற்றி பெறுவோம்.

இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் சென்னையில் மட்டுமல்ல முதல்வர் ஸ்டாலினின்  அனுமதியை பெற்று டெல்லிக்கும் சென்று  பிரதமர் அலுவலகம் முன்பு போராடுவோம். அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மேற்கு வங்கத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்மையில்  பங்கேற்றுள்ளனர்.  தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்ற தேர்தலை போல 2024 ம் ஆண்டு வரும் தேர்தலிலும் பாஜகவை ஓட ஓட விரட்டி அடிப்போம். 2024 தேர்தல் பிரசாரத்தின் சிறந்த தொடக்கமாக இந்த போராட்டம் அமைந்துள்ளது”, என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *