திருநின்றவூர், நடுக்குத்தகையில் சமுதாய வளைகாப்பு விழா : 200 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி வாழ்த்தினார்
திருவள்ளூர் அக் : திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், நடுக்குத்தகை தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறை சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்பு, காரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வாழ்த்தி பேசினார்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆட்சி அமைவதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் என்னென்ன திட்டங்களையெல்லாம் வெளியிட்டாரோ அத்திட்டங்களையெல்லாம் நடைமுறைப்படுத்தும் வகையில் செயலாற்றி வருகிறார். அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் இன்று நடைபெறும் சமுதாய வளைகாப்பு விழாவில் ஆவடி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா திருநின்றவூரில் நடைபெறுகிறது.
கர்ப்ப காலத்தில் ஒரு கர்ப்பிணிக்கு சுகாதாரம், ஊட்டச்சத்து எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தாயின் மகிழ்ச்சி மிகவும் அவசியம், அதற்கான சூழலையும் கர்ப்பிணிக்கு குடும்பத்தினர் ஏற்படுத்தி தரவேண்டும், அந்த ஒரு வாய்ப்பை இந்த வளைகாப்பு நிகழ்ச்சி அமைத்து தந்துள்ளது இம் முகாமில் 1000 நாட்கள் முக்கியத்துவம், இரத்த சோகை, சரிவிகித உணவு, தன் சுத்தம் மற்றும் தாய்பாலின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு கண்காட்சி, மருத்துவ முகாம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சீர்வரிசை பொருட்களான, தட்டு, வளையல், புடவை போன்றவையும், 5 வகையான கலவை சாதம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக பால்வளத்துறை அமைச்சர் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவு அரங்கங்களை நேரில் பார்வையிட்டு ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, திருநின்றவூர் நகராட்சி தலைவர் உஷா ரவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.