தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் திருப்பம். உரிமையாளர் ஜே பி ஜோதியின் பார்ட்னர் சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரால் பரபரப்பு :
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் மளிகை கடை மற்றும் தீபாவளி சீட்டு பண்டு நடத்திவந்தார். மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார்.
அவரிடம் தாமரைபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு மற்றும் குறுவாயில் உட்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டு சீட்டு கட்டிவந்துள்ளனர். பணம் கட்டியவர்கள் சென்று கேட்டபோது சில நாட்களில் பொருட்கள் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தராததால் வெங்கல் காவல் நிலையம், மாவட்ட எஸ்பி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜே.பி.ஜோதியிடம் ஏஜெண்ட்டாக பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில் திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார். உரிமையாளரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சத்தியமூர்த்தி மளிகை கடைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி கொடுத்துள்ளார். இதனால் சத்தியமூர்த்தியை பார்ட்னராக சேர்த்துக் கொண்டதாகவும், 3 மாதத்தில் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் சீட்டு பணம் செலுத்தி வந்த நிலையில் சாட்சி ஸ்டார் என்ற பெயரில் வேறு புதிய அட்டையை கொடுத்து அதன் மூலம் பணம் வசூல் செய்துள்ளனர்.
வருமான வரி பிரச்சினை வரும் என்பதால் இந்த பெயர் மாற்றம் என சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இந்த நிலையில் சீட்டு முடியும் தருவாயில் ஜே.பி.ஜோதிக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி காவல் துறையால் மூடப்பட்டது. சுமார் 8 கோடியே 25 லட்சம் ரூபாய் வரையில் சத்தியமூர்த்தி பணம் வசூல் செய்து தராமல் ஏமாற்றியதால் தான் ஜே.பி.ஜோதியால் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு தரமுடியாமல் இருப்பதாகவும், சத்தியமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தருமாறும் எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் உறுதி அளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே மோசடி வழக்கும், கொலை வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.