புதுச்சேரி நோயாளிகளுக்கு சிகிச்சையும் தர மறுத்தால் ஒன்றிய அரசின் ஜிப்மருக்கு எதிராக போராட்டம்
புதுச்சேரி நோயாளிகளுக்கு சிகிச்சையும் தர மறுத்தால் ஒன்றிய அரசின் ஜிப்மருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் .சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
புதுச்சேரியில் உள்ள ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனை ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதாவது ஜிப்மரில் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் சிகிச்சை பெற்று நலமுடன், வீடு திரும்புவதற்கு மாறாக ஏண்டா இந்த மருத்துவமனைக்கு வந்தோம் என்று அவதியுற்று வெளியேறும் நிலைக்கு ஆளாக்கி வருகின்றது. இதனால் அங்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு ஆயுட்காலம் குறைகிறதே தவிர, சிகிச்சை பெற்று நலமுடன் வெளிய வரமுடியாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு அட்டையுள்ள வெளிமாநில நோயாளிகள் உடனடியாக சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டாலும் கூட, புதுச்சேரி நோயாளிகள் சேர்த்துக் கொள்ளவே மறுக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டதற்கு நிர்வாகம் வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் ஜிப்மரில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நோய் குணமடைவதற்கான மருந்துகளை எழுதி தருகின்றனர். அதை வாங்குவதற்காக ஜிப்மர் மருந்தகத்தில் நீண்ட நேரம் நின்று மருத்துவர் எழுதி கொடுத்த சீட்டை கொடுக்கும்போது, இந்த மருந்து இங்கு இல்லை, வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் நோயாளிகளுக்கும், மருந்தக ஊழியர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் ஜிப்மர் மருந்தகத்தில் உள்ள மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒரு மருத்துவமனையின் நல்ல நிர்வாகம் என்பது நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வாங்கி வைத்து, கிடைக்கச் செய்வதுதான். அதற்கு மாறாக இருக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க வேண்டும் என்ற ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மருத்துவர்கள் சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளிக்கு என்ன நோய், எந்த மருந்து சாப்பிட்டால் குணமாகும் என்று சிந்திப்பதை கைவிட்டு, இவருக்கு எந்த மருந்து ஜிப்மர் மருந்தகத்தில் கிடைக்கும் என்றே சிந்தித்து எழுதித்தர தொடங்குவர். இதனால் ஜிப்மரில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தரம் மேலும் கீழே செல்லும்.
எனவே ஜிப்மர் நிர்வாகம் மருந்தகத்தில் இருக்கும் மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்று, ஜிப்மருக்கு வரும் நோயாளிகளுக்கு என்னென்ன மருந்துகள் தேவைப்படுமோ அனைத்து விதமான மருந்துகளையும் வாங்கி இருப்பு வைத்து வழங்க வேண்டும். புதுச்சேரி குடியுரிமை உள்ள மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை கேட்காமலேயே இலவச சிகிச்சை அளிக்கவும் முன்வர வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஜிப்மர் நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவு பெற்று ஜிப்மரில் சிகிச்சை கிடைக்காததாலும், மருந்து, மாத்திரைகள் வழங்காததாலும் இறக்கும் நோயாளிகளின் குடும்பத்தாரை திரட்டி ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக பெருந்திரள் போராட்டத்தை மாநில தி.மு.க.கழகம் நடத்தும் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.