நெல்லை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை – கல்லூரி கட்டணம் செலுத்த பெற்றோர்கள் சிரமப்பட்டதால் விபரீத முடிவு

Loading

களக்காடு, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). தொழிலாளி ஆவார். இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18) பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார்.

இதற்கான கல்லூரி கட்டணம் ரூ 12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தினார். அவர் கூலி தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்துள்ளார். இருந்த போதிலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது.

தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்கள் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி மாணவி பாப்பா மன வேதனை அடைந்தார். இதற்கிடையே நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது வீட்டு கதவை உள்புறமாக பூட்டி விட்டு பாப்பா துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும் அவரது மனைவியும் கதவை குச்சியால் திறந்து உள்ளே சென்று பார்த்த போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் பாப்பாவின் கைப்பையை சோதனையிட்ட போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது.

அதில், அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *