மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு; 1000 சவரன் நகைகள் மீட்பு-கொலையாளியான கார் டிரைவர் சிக்கியது எப்படி?
சென்னை,
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55). தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர். இந்த நிலையில் இருவரும் கொடூரமாக தங்களது கார் டிரைவரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும், அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர். கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் அமெரிக்காவிலேயே தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில் வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில் அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர்.
தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர்.
அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர். பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.