ஓபிஎஸ்யுடன், ஐ.பெரியசாமி மோதல்*
உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை கட்டும் கட்டிடங்களின் விலையில் வித்தியாசம்- ஏன் என பேரவையில் கேள்வி எழுப்பிய ஓ. பன்னீர்செல்வத்திற்கு , நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ஏன் இது குறித்து முடிவெடுக்கவில்லை என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பினார்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, பேரவைத்தலைவர் அப்பாவு கிளை நியாயவிலை கடைகளுக்கு 6 லட்சம் மதிப்பீட்டில் 200 சதுர அடி பரப்பளவில் டைப் டிசைன் அமைத்து கழிவறை உடன் கட்ட வேண்டும் என பொதுப்பணித்துறையிடம் திட்டம் பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் 15 கிளை நியாயவிலைக் கடைகள் கட்ட 90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ., பெரியசாமி,
இவை சரியாக இருந்தால் ஏற்று கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசும்போது,
ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று பொதுப்பணித் துறையிடம் மற்றும் ஊராட்சி துறையிடம் மதிப்பீடு கேட்டிருந்தோம். அதில் இரண்டு வகுப்பறைகள் கட்ட ஊராட்சித் துறை 16 லட்சமும், பொதுப்பணித்துறை 24 லட்சம் கட்ட தேவைப்படும் என்று தெரிவித்தது. ஏன் இந்த வேறுபாடு, முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு துறை சார்ந்த அமைச்சர் இந்த வேறுபாட்டை விளக்க வேண்டும்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பெரியசாமி,
நீங்கள் சொல்வது போல் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி துறையில் கட்டும் கட்டிடங்களின் விலையில் வேறுபாடு உள்ளது உண்மைதான். மேலும் நியாயவிலைக் கடைகளை பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் மூலம் டெண்டர் விட்டு கட்டப்படுகிறது. பெரும்பாலும் பொதுப்பணித்துறைக்கு கொடுக்க படவில்லை. பள்ளி கட்டிடங்கள் கட்ட மட்டுமே பொதுப்பணித்துறை கட்டி வருகிறது. மேலும் நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது இது குறித்து முடிவு எடுத்திருக்கலாம்? தற்போது இதுகுறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.