முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்
தி.மு.க. கட்சி அலுவலகம் டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.
அண்ணா – கலைஞர் அறிவாலயம் என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.
மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம்
தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றார்.
நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிர மணியன், தா.மோ.அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அவருடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோரும் புறப்பட்டு சென்றனர். டெல்லி சென்ற அவரை கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் வரவேற்றனர்.
மோடியுடன் இன்று சந்திப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தை முன்னிட்டு, டெல்லியில் அவர் அதிகாரபூர்வமாக யார், யாரையெல்லாம் சந்திக்க உள்ளார்? என்கிற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதிகாரபூர்வமான அவரது முதல் சந்திப்பு பிரதமருடன் அமைகிறது.
அதாவது இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அறையில் நடைபெறுகிறது. அப்போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை முழுமையாக தரவேண்டும், மேகதாது அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் வலியுறுத்த இருக்கிறார்.
குறிப்பாக ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த உள்ளார். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்திரமோடியிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ஏப்ரல் 2-ந்தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கும் அவர் அழைப்பு விடுக்கிறார்.
அமித்ஷாவை சந்திக்கிறார்
இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லி மோதிலால் நேரு ரோட்டில் உள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி வீட்டில் அவரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி இருப்பதால், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
நிர்மலா சீதாராமன்
இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை அக்பர் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சப்தர்ஜங்க் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கிறார். மாலை 4.30 மணிக்கு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தொழில், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலை உத்யோக் பவனில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் சந்திக்கிறார்.
மந்திரிகளுடனான இந்த சந்திப்பின்போது ஏப்ரல் 2-ந்தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கும் அவர் அழைப்பு விடுக்கிறார்.
சோனியாகாந்தி
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார். மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்கள்.
இந்த தகவல்களை டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்ல அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா
டெல்லியில் தி.மு.க. அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை ஏப்ரல் 2-ந்தேதி மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் இரவே டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.