புராதனமாக மற்றும் தொன்மையான கோவில்களை புதுப்பிக்க வல்லுனர் குழு அமைப்பு
சென்னை, மார்ச் 20-
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையில் கட்டுபாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை பழைமை மாறாமல் புதுப்பிக்க திருத்திய மாநில அளவிலான வல்லுநர் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையால் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையில் கட்டுபாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை பழைமை மாறாமல் புதுப்பிக்க திருத்திய மாநில அளவிலான வல்லுநர் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான வல்லுநர் குழுவில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் வல்லுநர் விவரம் முதுநிலை ஆலோசகர் கே.முத்துசாமி கட்டமைப்பு வல்லுநர், தொல்லியல் கண்காணிப்பாளர் கே.மூர்த்தீஸ்வரி, தொல்லியல் துறை வல்லுநர், மாநில தொல்லியல் கண்காணிப்பாளர் சீ.வசந்தி தொல்லியல் துறை வல்லுநர், தொல்லியல் கண்காணிப்பாளர் தொ ல்லியல் வடிவமைப்பாளர் டி.சத்தியமூர்த்தி, கட்டிட மற்றும் சிற்பக்கலை வல்லுநர் கே.தட்சிணாமூர்த்தி, மாநில தொல்லியல் துறை கல்வெட்டு படிமங்கள் மற்றும் நுண்கலை நிபுணர் ஆர்.சிவானந்தம், சைவம் குருக்கள் ஆகம வல்லுநர் சிவஸ்ரீ கே.பிச்சை, ஆகம வல்லுநர் கே.சந்திரசேகர பட்டர், வைணவம் ஆகம வல்லுநர் அனந்தசயன பட்டாச்சாரியார், ஆகம வல்லுநர் கோவிந்தராஜப் பட்டர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமைப் பொறியாளர் ஆகியோர் கோவில்களில் திருப்பணிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடிய திருத்திய மாநில அளவிலான வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.