நியூட்ரினோ திட்டம் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 15-
நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என மத்திய அணுசக்தித்துறை தெரிவித்தது.
இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் சம்பல் குட்டக்குடி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. மலை உச்சியில் 1000 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது . இதனால் பாறை சரிவு, மலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே 2021 ஜூன் 17 இல் இதுதொடர்பான இது தொடர்பாக மனு அளித்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். குறிப்பாக வனப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் . இயற்கை கட்டமைப்பு சிதைவுகளும் விவகாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கக் கூடாது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகள் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.