கணவரை கடத்தி வைத்துக்கொண்டு மனைவிக்கு போலி விவாகரத்து ஆர்டர் பெற்றுக்கொடுத்த கும்பல்
நடவடிக்கை எடுக்கக்கோரி ஐஜியிடம் பெண் புகார்
மதுரை, மார்ச் 12-
கணவரை கடத்தி வைத்துக்கொண்டு மனைவிக்கு போலி விவாகரத்து ஆர்டர் பெற்றுக்கொடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண், தென்மண்டல ஐஜி யிடம் புகார் அளித்துள்ளார்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்த தீபா என்பவர், இந்திய இராணுவத்தில் காமாண்டிங் ஆபிசராக பணிபுரிந்து வந்த நிலையில், 2012 ஆகஸ்ட் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் தோமையர் புரத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ரீகன் என்பவருடன் திருமணமாகியது. இந்நிலையில் இவரது கணவர் வேலை தேடி 2018-ம் ஆண்டு சென்னை சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறி காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கயில்லாத காரணத்தினால் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
இது பற்றி இன்று வரை நடவடிக்கை எ டுக்கவில்லை எனக்கூறி மதுரை யில் உள்ள தென் மண்டல ஐ.ஜி.க்கு மனு அளித்து விட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனக்கு திருமணம் ஆகும் பொழுது நான் இந்திய இராணுவத்தில் காமாண்டிங் ஆபிசராக வேலை பார்த்து வந்தேன். இந்நிலையில், 2018ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் வேலை கிடைத்துள்ளதாகவும் அதற்கான ஆர்டர் பெற்று வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில், நான் தொடர்ந்து காவல் நிலையத்தில் மனு அளித்து நடவடிக்கை இல்லாததால் நீதிமன்றம் மூலம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன். இந்நிலையில கொரோனா பேரிடர், ஊரடங்கு காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாமல் விடுமுறையில் இருந்தது. அதனால் காவல்துறை எனது கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் 2016-ஆம் ஆண்டே எனக்கும் எனது கணவருக்கும் நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்துள்ளதாக 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் எனக்கும் என் கணவருக்கும் தெரிய வந்தது.
எனது கணவர் 2018-ம் ஆண்டு வரை என் வீட்டில் இருக்கும் பொழுது, இருவரும் நீதிமன்றம் செல்லாத பொழுது எனது கணவரின் குடும்பத்தினர் திட்டமிட்டு போலியான விவாகரத்து ஆணை பெற்றிருக்கிறார்கள்.
இதில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் எனது கணவரின் குடும்பத்தினர், என் கணவரை கடத்தி வைத்துக் கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக தெரியவருகிறது. எனவே தென் மண்டல காவல் ஐ.ஜி. இதுகுறித்து விசாரணை செய்து, போலியான விவாகரத்து பெற்றவர்கள் மீதும், எனக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வரும் கன்னியாகுமரி சாந்த புரத்தைச் சேர்ந்த வஜீலா என்பவர் மீதும், அவருடன் தொடர்புடைய தீவிரவாத மற்றும் போதை கும்பலை சார்ந்தவர்கள் மீதும், எனது கணவர் குடும்பத்தினர் மற்றும் எனது தந்தையின் சகோதரி குடும்பத்தினர் மீதும் அவர்களைச் சார்ந்த சட்டவிரோத போதை கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தமிழக டி.ஜி.பி, மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளேன், என்று கூறினார்.