பெரும்புதூர் செயின்ட் கோபைன் ஆலை: 3 புதிய பிரிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Loading

காஞ்சிபுரம், மார்ச் 10-
பெரும்புதூரில் உள்ள கண்ணாடி உற்பத்தி செயின்ட் கோபைன் தொழிற்சாலையில் 3 புதிய பிரிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெரும்புதூரில், செயின்ட் கோபைன் என்ற சர்வதேச வளாகம் உள்ளது. இங்கு 1998-ல் இருந்து பெரிய பெரிய கட்டடங்களுக்குக்கான கண்ணாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் செயின்ட் கோபைன் நிறுவன வளாகத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் செயின்ட் கோபைன் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு,ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் சிப்காட், நகர்புற வனம் ஆகிய 3 புதிய பிரிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நவீன தொழில்நுட்பத்தில் பிரத்யேக வடிவமைப்பில் 4.0 என்ற சிறப்புத்தன்மைகள் உள்ளடக்கிய நவீன கட்டமைப்புகளுக்கு ஏற்ற கண்ணாடிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்ற கண்ணாடி போன்றவற்றை முதல்வர் தொடங்கி வைத்தார். முழுவதும் ஒருங்கிணைத்த ஜன்னல் பிரிவு என்ற கருத்தில் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் 1 லட்சம் ஜன்னல்களை ஆண்டுக்கு உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் ஆசிய அளவில் ஒரு பெரிய தொழிற்சாலையையும் இவ்விரிவாகத்தில் முதல்வர் தொடங்கினார். பெரும்புதூரில் 177 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிறுவனம் ரூ.3750 கோடிக்கும் மேலாக முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்நிறுவனம் சுமார் ரூ.4,700 கோடி முதலீடு செய்து நேரடியாக 2000 நபர்களுக்கு, மறைமுகமாக 2500 நபர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இவ்வளாகத்தில் கண்ணாடி , முகம் பார்க்கும் கண்ணாடி ,சூரிய ஆற்றல் கண்ணாடி , குண்டு துளைக்காத கண்ணாடி, தீப்பிடிக்காத கண்ணாடி ,பாதுகாப்பு கண்ணாடி, வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையிலான கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. மதிப்பு கூட்டப்பட்ட 90% கண்ணாடிகள் இந்த வளாகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அத்துடன் சுமார் 3 லட்சம் சதுர பரப்பளவில் ஏறக்குறைய 60 ஆயிரம் மரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் தமிழ்நாடு அரசின் பசுமை இலக்கை எட்டுவதற்கு, மாநிலத்தின் பசுமை பகுதி அளவை 33% உயர்த்த உதவுகிறது.
இந்நிகழ்ச்சியில் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ,சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *