அறிவியல் தமிழின் அற்புதம் வளரும் அறிவியல்

Loading

சென்னை, மார்ச் 5-
அன்னை தமிழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் தமிழ் மொழியில் அறிவியல் சார்ந்த, தரமான ஒரு இதழ் வெளிவந்தால் அது சமூக மேம்பாட்டிற்கும் மாணவர்களின் அறிவுச்சிந்தனையை வளர்க்கவும் வாழ்வியல் வழிமுறைகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.
இந்த இதழ் உலகப்புகழ் விஞ்ஞானி அவர்களின் சிந்தனையை செயலாக்க 2010-ஆம் ஆண்டு இந்த இதழ் மலர்ந்தது.

இந்த விதையை தம் மனதில் புதைத்த Dr. EKT. சிவகுமார் அவர்கள் உருவாக்கிய விருட்சம் தான் வளரும் அறிவியல். இது 12 ஆண்டுகளில், தமிழகத்து மாணவர்கள் அறிவியல் இளைப்பாறும் மிகப்பெரிய ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. இது Dr. EKT. சிவகுமார் அவர்களின் சிந்தனைகளில் கருவாகி, செயல்பாடுகளால் உருவாகி, ஆற்றல் கொண்ட அவரது பேனாவால் அறிவியல் வளர்க்கிறது. இது நல்லோர் பலரின் கூட்டு பயணம்
அறிவியல் சார்ந்த தகவல்களை மட்டுமே தாங்கிவரும் ஏடு அல்ல வளரும் அறிவியல்.

மனித நேயமும், மனிதாபிமானமும் சொல்லும் பல வாழ்க்கை தத்துவங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகள், அறிவியல் வல்லுநர்கள், நீதியரசர்கள் கல்வியாளர்கள், மருத்துவர்கள் என பலரும் தங்கள் கட்டுரைகளை வளரும் அறிவியலில் பதிவு செய்து வருகிறார்கள்.
பொதுவாக அறிவியல் சார்ந்த பல இதழ்கள் உலக அளவில் வெளிவருவதுண்டு. ஆனால் அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவருபவை. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் கூட அவ்வளவு எளிதில் இந்த இதழ்களை படித்து புரிந்துகொள்ள முடியாது.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு, இத்தகைய சர்வதேச இதழ்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இந்த இடைவெளிகளை போக்கும் பாலமாக விளங்குகிறது வளரும் அறிவியல்.

ஆழமான அறிவியல் கருத்துக்களை, புதிய கண்டுபிடிப்புகளை, எளிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் வளரும் அறிவியல்.
உலகத்தர அறிவியல் அமைப்புகளின் ஆய்வுக்கட்டுரைகளின் சாரமும் இதில் உண்டு, பெண்களுக்குத் தேவையான அறிவியல் துணுக்குகளும், நலம் சார்ந்த நல்ல செய்திகள் இதில் உள்ளடக்கம். உலகின் பல மூலைகளில் நடந்தேறும் பல அறிவியல் விந்தைகளையும் தாங்கி வரும் பல்சுவை அறிவியல் இதழாகவும் பயணிக்கிறது வளரும் அறிவியல்.

இந்தியாவில் மாணவர்களின் முயற்சியில் நிகழும் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பல தகவல்கள் “வளரும் அறிவியலில்” தொடர்ந்து கட்டுரைகளாக வருகின்றன. அதுமட்டுமல்லாது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) பல முயற்சிகள், நிகழ்வுகள் குறித்த செய்திகள் அனைத்தும் தொடர்ந்து வளரும் அறிவியலில் வெளிவருகிறது.

பல அறிவியல் அறிஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து தகவல்களை வெளியிடும் தளமாகவும் விளங்குகிறது வளரும் அறிவியல். இது மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் ஒன்றாகத் திகழ்கிறது.
அதுமட்டுமல்லாமல், அறிவியல் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மொழியில் சர்வதேச அங்கீகாரத்துடன் ISSN எனும் சர்வதேச பதிவு எண்ணுடன், பல ஆயிரம் பிரதிகளாக வெளிவரும் ஒரே இதழ் வளரும் அறிவியல். மேலும் உலக அளவில் சுமார் 65 நாடுகளுக்கு வளரும் அறிவியல் இதழ் சென்று சேர்கிறது.

முற்றிலும் சேவை நோக்கத்தோடு, வளரும் அறிவியல் இதழை சிறப்பாக கொண்டு வரும் பல்துறை வித்தகர், அறிவியல் அறிஞர், கல்வியாளர் என பன்முகத்தன்மை கொண்ட தன்னலமில்லா மனிதர், இவ்விதழின் ஆசிரியர் Dr. EKT. சிவகுமார் அவர்களின் சேவை பணி மிளிரவும் தொடரவும் துணை நிற்போம், வாழ்த்துவோம் பாராட்டுவோம்.
அறிவியல் தமிழையும், அறிவியல் அறிவையும் தமிழ் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வளரும் அறிவியலில் பணி மேலும் பல நூற்றாண்டுகள் தொடரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *