குழப்பத்தில் பத்மநாபபுரம் திமுக 7, பாஜக 7; சமமாய் பிரிந்த சுயேச்சைகள்(3-3),
கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த மனோ தங்கராஜ், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
பத்மநாபபுரம் நகரட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தி.மு.க 7 வார்டுகளிலும், பா.ஜ.க 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும், ஒரு வார்டில் ஜனதா தளம் வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ளனர். தி.மு.க, பா.ஜ.க-வினர் சேர்மன் பதவிக்காக காய் நகர்த்தி வருகின்றனர். ஆறு சுயேச்சை கவுன்சிலர்களில் மூன்றுபேர் தி.மு.க பக்கமும், மூன்று பேர் பா.ஜ.க பக்கமும் போய்விட்டனர். ஜனதாதளம் கவுன்சிலர் எந்த பக்கம் சாய்கிறாரோ அந்த கட்சி வெற்றிபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்குதான் புது சிக்கலே பிறந்துள்ளது.
மனோ தங்கராஜ்பத்மநாபபுரம் நகராட்சி 6-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார் ஜனதா தளத்தைச் சேர்ந்த நாதிறா பானு. தேர்தல் சமயத்தில், `எங்களுக்கு இந்த வார்டில் ஆதரவு தாருங்கள், சேர்மன் தேர்தலில் ஆதரவு தருகிறோம்’ என தி.மு.க-விடம் பேசி பார்த்ததாம் ஜனதாதளம். ஆனால் தி.மு.க அவர்களை மதிக்காமல் றயீஷா என்ற வேட்பாளரை களம் இறக்கியது. தேர்தல் முடிவில் ஜனதா தளம் வேட்பாளர் நாதிறா பானு 330 வாக்குகளையும், தி.மு.க வேட்பாளர் றயீஷா 282 வாக்குகளையும் பெற்றனர். மிகவும் கஷ்டப்பட்டு 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஜனதா தளம்.
பத்மநாபபுரம்தங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடாது என எதிர் வேட்பாளரை களம் இறக்கிய தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்க கூடாது என ஜனதா தளம் நிர்வாகிகள் உறுதியாக நிற்கிறார்களாம். அதேசமயம், ஓட்டுபோட்ட சிறுபான்மை மக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என கூறுகிறார்களாம். எனவே யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிக்கலாமா என்பது குறித்து ஜனதா தளம் கவுன்சிலர் ஆலோசித்து வருகிறாராம்.
ஜனதாதளம் கவுன்சிலர் நடுநிலை வகிக்கும் பட்சத்தில் தி.மு.க, பா.ஜ.க சரிசமமான நிலைக்கு வரும். குலுக்கல் முறையில் இரண்டு கட்சிகளில் எதாவது ஒரு கட்சி வெற்றிபெறும். எனவே சேர்மன் பதவியை பிடிக்க என்ன வழி என தெரியாமல் தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் குழம்பிபோய் உள்ளன.