பொருளாதார ஆய்வறிக்கை: வரும் நிதியாண்டில் பொருளாதாரம் 8 சதவீதத்துக்கு மேல் வளரும் என கணிப்பு

Loading

வரும் 2022-23 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8 முதல் 8.5 சதவீதம் வரை வளரக்கூடும் என்று நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 கூறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் இந்திய ஒன்றிய அரசின் வரசெலவுத் திட்டம் (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அதன்படி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று திங்கள்கிழமை பகலில் நாடாளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்தார்.

பட்ஜெட் கூட்டத் தொடர், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையோடு திங்கள்கிழமை காலை தொடங்கியது. அவர் உரை முடிவடைந்த பிறகு பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் முக்கிய அம்சங்கள்:

1. வரும் நிதியாண்டுக்கான வளர்ச்சி, அதாவது 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்துக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2. நடப்பு 2021-22 நிதியாண்டில் வளர்ச்சி 9.2 சதவீதம் இருக்கும் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி அதைவிடக் குறைவாக இருக்கும் என்பதே பொருளாதார ஆய்வறிக்கையின் முன் கணிப்பாக உள்ளது.

3. இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் தலைமையிலான ஒரு குழு இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. சில நாள்களுக்கு முன்புதான் வி.ஆனந்த நாகேஸ்வரன் என்பவர் இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்றிருந்தார். முந்தைய முதன்மை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் பதவிக் காலம் 2021 டிசம்பரோடு முடிவடைந்து அவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

4. பண வீக்கம் மீண்டும் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. எண்ணெய் விலை உயரும் நிலையில், இறக்குமதி மூலமாக வரும் இந்தப் பணவீக்கம் குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

5. இந்த அறிக்கை எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே ஏற்பட்ட இடர்ப்பாடுகளை இந்த அறிக்கை ஒப்புக்கொள்கிறது. குறிப்பாக, ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதின் வழியாக உலகம் முழுவதும் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால், பணவீக்கம் அதிகரித்து, உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் மைய வங்கிகள் ரொக்கப் புழக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

6. அதே நேரம், இந்தியாவின் பேரினப் பொருளாதார நிலைத்தன்மை தொடர்புடைய புறநிலைக் குறியீடுகள், நிதி நிலைக் குறியீடுகள் மற்றும் நிதித்துறை, சுகாதாரத் துறை பண வீக்கம் ஆகியவை வரும் நிதியாண்டில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *