அமாவாசை தினத்தில் காக்காவுக்கு சோறு வைப்பது ஏன்?
மற்ற ஜீவராசிகளை விட்டு காகத்திற்கு முக்கியமாக அமாவாசை தினத்தில் உணவளிப்பது ஏன் என தெரிந்துக்கொள்ளலாம்.
தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம். அதுமட்டுமல்லாமல் அமாவாசையிலும் வைப்பது மிகவும் சிறப்பு. மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து அமாவாசை நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை. அதேபோல இந்நாளில் தர்ப்பணம் செய்வதும் சிறப்பு என்று சாஸ்திரம் கூறுகிறது.
அமாவாசையில் நம் முன்னோர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நம் வீட்டிற்கு வரும் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பது போல நம்முடைய வீட்டு வாசலுக்கு வரும் காகங்களுக்கு உணவு கொடுப்பதனால் எமன் மகிழ்ச்சியடைவாராம். அதனால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்குமாம். அதுமட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு நாம் படைக்கும் உணவை முன்னோர்களின் வடிவில் காகங்கள்தான் உண்ணும் என்பது நம்பிக்கை. அதனால் காகங்களின் வடிவில் வரும் முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவினை சமைத்து விரதம் இருந்து ப்டையல் வைப்பதின் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடுமாம்.
மேலும் சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திபடுத்தியதாகவும் ஜோதிடர்கள் கருதுகிறார்கள்.
மேலும் தை அமாவாசை தினமான நாளை காகத்திற்கு பலரும் உணவு வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். அப்படி காகங்கள் சாதத்தை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை. முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உணவு அளிப்பதற்கு காரணம் இதுதான்.
மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் பித்ரு பூஜை செய்து காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது நாம் குளித்து விட்டு தான் செய்ய வேண்டும்.