ரஜினியை அவமானப்படுத்திய உணவு பரிமாறுபவர்… இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய நிகழ்வு..!
அவமானம் என்பது நமது சுயமரியாதையை தூண்டிவிடும் ஒரு கருவி எனலாம். அவமானப்பட்டவன் அதனை மீண்டும் பட்டுவிடக்கூடாது என்பதற்காக உழைப்பான். அது அவனுக்கு வெற்றியையே தேடிக் கொடுக்கும். சினிமாத்துறையை பொறுத்தவரை எந்தவித background உம் இல்லாமல் உள்ளே நுழைபவர்களுக்கு எளிதில் வாய்ப்புகள் கிடைப்பதும் இல்லை, அப்படியே கிடைத்தால் அவர்களுக்கு அது நிலைப்பதும் இல்லை. அதற்காக பல அவமானங்களையும், பல சோதனைகளையும் கடந்து முன்னேற வேண்டும்.
அப்படி தனது ஆரம்பக் காலத்தில் உணவு பரிமாறுபவரிடம் ஒரு முட்டைகாக அவமானப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதை தான் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகின்றது. .
இன்று உச்சநட்சத்திரமாக, தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் கூட, கால்குலேட்டரில் இடம் பெறாது என்பார்கள்.
100 கோடி, 150 கோடி என ஆருடம் சொல்பவர்களும் உண்டு. இன்று அவர் நினைத்தால், எதையும் வாங்கலாம். எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்.
ஆனால், ஆரம்பகாலத்தில் ரஜினி நடித்த 16 வயதினிலே படத்தின் ஷூட்டிங்கின் மதிய வேளையில் 4 வகையான உணவு வருமாம். முதல் தரம் ஹீரோ கமலுக்கானதாகவும், இரண்டாவது தரம் இயக்குனர் பாரதிராஜாவுக்கானதாகவும், மூன்றாவது தரம் ஹீரோயின் ஸ்ரீதேவிக்கானதாகவும் வரும். மற்றவர்களுக்கு 4வது தர சாப்பாடு தான் வருமாம். அதுதான் ரஜினிக்கும் வழங்கப்பட்டது. அவருடன் மேலும் பல துணை நடிகர்களும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அப்போது அசைவ உணவு கொண்டு வந்ததை அறிந்த ரஜினி, பரிமாறுபவர்களிடம், ‛முட்டை இருந்தா தாங்க’ என்று கேட்டுள்ளார்.
‛இப்போ தான் கோழி அடைப்பு எடுத்திருக்கிறது’ என கிண்டலாக பதிலளித்து, மறுத்து கடந்திருக்கிறார் அங்கு பரிமாறிய ஒரு நபர். ரஜினி கேட்ட ஒரு முட்டையை அவர் தர மறுத்தது ரஜினியின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
காலங்கள் கடந்தது. துணை நடிகனாக இருந்த ரஜினி, உலகம் போற்றும் சூப்பர்ஸ்டாராக மாறினார். அப்போது ’வீரா’ படத்தில் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்தது. 16 வயதினிலே படத்தின் போது உணவு பாரிமாறிய அதே நபர் இப்போதும் ரஜினிக்கு உணவு மாறினார். ஆனால், இந்தமுறை ரஜினிக்கு முதல் தர உணவு பரிமாறப்பட்டது. அப்போது அந்த நபரை அடையாளம் கண்ட ரஜினி, ‛முட்டை இருக்கிறதா…’ என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரோ ’இப்போ கொண்டு வருகிறேன்’ என சொல்லி முட்டையை எடுத்துக் கொண்ட வர ஓட முயற்சித்துள்ளார்.
உடனே அவரை அழைத்த ரஜினி, ‛கோழிக்கு இப்போ அடைப்பு எடுக்கலையா’ என கிண்டலாக கூறியுள்ளார். ரஜினி இப்படி சொன்னதும் எதிரில் இருந்த அந்த நபருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. ரஜினி பழசை மறக்கவும் இல்லை; அதை மறக்காததால் தான் முன்னேறவும் முடிந்தது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம்.
இந்த சுவாரசிய நிகழ்வை சமீபத்தில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில், காமெடி பேச்சாளர் மதுரை முத்து இதை நினைவு கூர்ந்திருந்தார். இதனை பார்த்த பலரும் ரஜினியின் இந்த செயலை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.