ஜல்லிக்கட்டு; அவனியாபுரத்தில் 24 காளைகளை அடக்கிய இளைஞர்..! முதலமைச்சர் வழங்கிய கார் பரிசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞருக்கு முதலமைச்சர் வழங்கிய கார் பரிசாக வழங்கப்பட்டது.
கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 300 மாடுபிடி வீரர்களும், 600க்கும் மேற்பட்ட காளைகளும் போட்டியில் பங்கேற்றன. 7 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால், அதிகபட்சமாக 100 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையையொட்டி வீரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாயந்த காளைகளை, காளையர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். அதில் கார்த்திக் என்ற இளைஞருக்கும், முருகன் என்பவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. முடிவில், கார்த்திக் என்பவர் 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு முதலமைச்சர் வழங்கிய கார் பரிசாக கொடுக்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2வது இடத்தைப் பிடித்த முருகனுக்கு டூவீலர் பரிசாகவும், 11 காளைகளை அடக்கி 3வது இடத்தை பிடித்த பரத் என்பவருக்கு காளை மற்றும் கன்றுக்குட்டி பரிசாக கொடுக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும், மாடுபிடி வீரர்கள் 26 பேரும் காயமடைந்தனர். வேடிக்கை பார்க்கச் சென்ற பார்வையாளர்களில் 11 பேர் காயமடைந்தனர். பாலமுருகன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மாடு வெளியே வரும் பகுதியில் நின்று ஜல்லிகட்டை பார்வையிட்டபோது, எதிர்பாரதவிதமாக ஒரு காளை ஒன்று அவரை முட்டியுள்ளது. இதில் படுகாயமைடந்த பாலமுருகன் உடனடியாக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.