அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதிக்கு மாற்றம் ஏன்?

Loading

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதிக்கு மாற்றம் ஏன்? ஆட்சியர் சொன்ன காரணம்

மதுரை: பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் 17ஆம் திங்கட்கிழமைக்கு ஜல்லிக்கட்டுப்போட்டி மாற்றப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் உலக புகழ் பெற்றவை. வெளிநாட்டுப்பயணிகளும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளைக் காண வருவார்கள். மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரைபோல அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 15ஆம் தேதி பாலமேடு மஞ்சமலை ஆற்று திடல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

வரும் 16ஆம் தேதியன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறும். விழாவிற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டு அதிகாரப்பூர்வமாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறும் நாளான ஜனவரி 16ஆம் தேதிக்கு பதிலாக 17ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சேகர், 16ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினத்திற்குப் பதிலாக 17ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறும்.

பொது மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. வெளியூர் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போட்டிகளை நேரலையில் கண்டு ரசிக்கலாம் என்று தெரிவித்தார்.

150 பார்வையாளர்கள் மட்டுமே கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த தமிழக அரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வடமாடு, மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளைகளுடன் காளையின் உரிமையாளர் ஒருவரும், உதவியாளர் ஒருவரும் பங்கேற்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *