முதலீட்டுக்கு வடகிழக்கு மாநிலங்கள் தயார் நிலையில் உள்ளன : மத்திய அமைச்சர் திரு . ஜி. கிஷன் ரெட்டி பேச்சு
புதுதில்லி, ஜனவரி 8, 2022:
முதலீட்டுக்கு வடகிழக்கு மாநிலங்கள் தயார் நிலையில் உள்ளன என வடகிழக்கு மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
வடகிழக்கு திருவிழாவில் வடகிழக்கு மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். வடகிழக்கு பகுதி மேம்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது. இதில் வடகிழக்கு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மற்றும் இதர தரப்பினருடனும் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பேசியதாவது:
தேசிய வளர்ச்சியின் நுழைவாயிலாக வடகிழக்கு பகுதி வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என பிரதமர் திரு. நரேந்திர மோடி சரியாக கூறினார். உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு திட்டம், தற்சார்பு இந்தியா திட்டம் மக்களுக்கு தேவையான ஆதரவை அளித்து மேம்படுத்தியுள்ளது. கிழக்கு செயல் நடவடிக்கை மூலம் வடகிழக்கு பகுதியின் மேம்பாட்டுக்கு மாண்புமிகு பிரதமர் அதிக முன்னுரிமை அளித்துள்ளார். புதிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை தற்போது வடகிழக்கு மாநிலங்கள் பெற்றுள்ளன. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக, சாலைகள், ரயில்வே பாதைகள், விமான நிலையங்கள் மற்றும் இன்டர்நெட் என இதர வசதிகளை பெறுவதில் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் முதலீட்டுக்கு தயார் நிலையில் உள்ளன என்ற தகவலை தொழில் அதிபர்கள் நாடு முழுவதும் நம்பிக்கையுடன் தெரிவிக்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வளங்கள், தாதுக்கள் , வன வளங்கள், வளமான நிலங்கள் ,மிகச் சிறப்பான காய்கறி பழங்கள் உற்பத்தி, மற்றும் ஈடு இணையற்ற இயற்கை அழகும் உள்ளது . இதன் புவியியல் அமைப்பு தென் கிழக்கு ஆசியாவுக்கு,வர்த்தகத்துக்கு சாத்தியமான பகுதியாக உள்ளது. தேவையான உள்கட்டமைப்பு மற்றும் சந்தை வசதிகளுடன் தென்கிழக்கு ஆசியாவின் வர்த்தக மையமாக வடகிழக்கு மாநிலங்கள் மாறும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கூறினார்.