கனரா வங்கியின் கைப்பேசி சேவை குறித்து அதிகாரிகள் சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
திருச்சி:
கனரா வங்கியின் கைபேசி சேவை குறித்து அவ்வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கனரா வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி அதிகாரிகளின் மிகப் பெரிய, அரசியல் சார்பற்ற, வங்கி அதிகாரிகள் சங்கமாகும்.
நிர்வாகத்துடன் நல்லுறவுடன், வங்கி வியாபாரத்தினை பன்மடங்கு பெருக்குவதன் மூலம், வங்கிக்கும் சங்கத்திற்கும் சிறப்பான எதிர்காலம் அமையும் என்று இச்சங்கம் உறுதியாக நம்பிக்கை வைத்து அதற்காக முழு மூச்சாய் உழைக்கிறது..
மேற்படி நோக்கத்தின் முக்கிய அம்சமாக, வங்கிக்கு இந்த ஆண்டு ரூபாய் 10000 கோடி நிகர லாபம் என்ற இலக்கினை நோக்கி, இச்சங்கத்தின் உறுப்பினர்கள் “இலக்குகளை வென்றெடுப்போம்” என்ற மாபெரும் இயக்கத்தினை அடுத்த 4 மாதங்களுக்கு முழு மூச்சாக நடத்த உறுதி பூண்டுள்ளனர். இந்த எழுச்சி இயக்கத்தின் துவக்கமாக, கனரா வங்கி அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், வாடிக்கையாளர்களை சந்தித்து, வங்கியின் பல்வேறு திட்டங்களையும், கைபேசி மூலம் எவ்வாறு வெகு எளிதாக பல்வேறு வங்கி சேவைகளை பெறலாம் என்பது குறித்த நேரடி விளக்கங்களையும் அளித்தனர்.
பெரும் வாடிக்கையாளர் வரவேற்பை பெற்ற இந்த முயற்சி, அருமையான யோகா பயிற்சிகளுடன் நிறைவடைந்தது. பின்னர், இந்த இயக்கத்தினை, சங்கத்தின் மூலஉத்திகளின் வழிகாட்டி ஜி.வி.மணிமாறன், சங்கத்தின் இளைய தலைமுறை பொதுச்செயலாளர் ரவிக்குமார், இணை பொதுச் செயலாளர் பிரபு ஆகியோர், சென்னை மயிலாப்பூர் லஸ் தேவாலயத்தில், முறைப்படி துவக்கி வைத்தனர். இந்த துவக்க விழாவில், 500க்கும் மேற்பட்ட கனரா வங்கி அதிகாரிகளும் மற்றவர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கனரா வங்கி சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் திரு. பழனிசாமி, மற்றும் பொது மேலாளர் திரு. ஸ்ரீகாந்த மொஹபத்ரா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தற்போதைய மூல உத்திகள் வழிகாட்டியுமான, ஜி.வி.மணிமாறன் அவர்களின் மாபெரும் சேவைகளுக்கான பாராட்டுக்களுடன், விழா இனிதே நிறைவடைந்தது.