காரைக்கால் பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் திருப்பம்.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது
காரைக்கால் பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் திருப்பம்.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் தேவமணி (50). பாமக மாவட்ட செயலாளரான இவர் கடந்த 22ம் தேதி இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றபோது, 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. பதற்றம் ஏற்பட்டதால், அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், தேவமணி படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை காரைக்கால் மாவட்ட திமுக எம்.எல்.ஏ. நாஜீம், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிவா, நேரு ஆகியோர் புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இந்த வழக்கை, சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த கோரி மனு அளித்தனர். தேவமணி கொலை வழக்கில், திருநள்ளார் பகுதியை சேர்ந்த 28 மற்றும் 19 வயதுடைய இரு நபர்களை மயிலாடுதுறையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கூலிப்படை தேவமணிக்கும் எதிர் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னையில், கூலிப்படையை ஏவி தேவமணி கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகின.
4 பேர் கைது இந்த நிலையில், தேவமணி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மணிமாறன், கலியமூர்த்தி, இராமச்சந்திரன், அருண் ஆகிய நான்கு நபர்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், பைக் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்விரோதம் காரணமாக மணிமாறன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூலிப்படையினர் உதவியுடன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கொலையில் தொடர்புள்ள மேலும் சிலரையும் கைது செய்துள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ள கலியமூர்த்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரக்கூடியவர் ஆகும். அவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.