ஆபாசமாக தெரியும் மாயக்கண்ணாடி… சினிமா பட பாணியில் நூதன மோசடி…
தேனியில், கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் ஆபாசமாக தெரியும் வகையிலான மாயக்கண்ணாடி இருப்பதாக கூறி, நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
உப்புகோட்டையைச் சேர்ந்தவர்கள் அரசமுத்து மற்றும் திவாகர் . இவர்கள் இருவரும் தங்களிடம் ஆபாசமாக தெரியும் மாயக்கண்ணாடி இருப்பதாகக் கூறி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் விலை பேசி உள்ளனர்.
இதனை நம்பி ஏமார்ந்த யுவராஜ் மாயக்கண்ணாடி வாங்கும் ஆர்வத்தில் பெரியகுளம் பகுதிக்கு தன் நண்பர்களான சீனிவாசன், மதன், வரதராஜன் ஆகியோருடன் காரில் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வந்துள்ளார். அப்போது அரசமுத்து மற்றும் திவாகர் ஆகியோர் பணத்தை வாங்கியவுடன் தப்பி ஓடியுள்ளனர்.
இவர்களை யுவராஜ் மற்றும் நண்பர்கள் 3 பேரும் துரத்தியதில் அரசமுத்துவை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பணத்துடன் தப்பி சென்ற திவாகரைபோலீசார் தேடிவருகின்றனர்.