உல்லாச கப்பலில் போதை விருந்து…. ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் சிக்கினர்

Loading

மும்பை அருகே நடுக்கடலில் சுற்றுப்பயணம் சென்ற உல்லாச கப்பலில் பயணிகள் போல மாறுவேடத்தில் சென்று போதை தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 6 பேர் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர்.

ஆன்லைன் மூலம் சுற்றுலா பயண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அந்த சொகுசு கப்பலில் சுமார் 1000 பயணிகள் பயணம் செய்ய முடியும். மும்பையில் இருந்து 2-ந்தேதி புறப்பட்டு அரபிக் கடலில் 2 இரவுகள் கழித்துவிட்டு கோவா வழியாக மீண்டும் 4-ந்தேதி காலை மும்பை திரும்பும் வகையில் அந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாடு முழுவதிலும் இருந்து 800க்கும் மேற்பட்டவர்கள் அந்த கப்பலில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.

திட்டமிட்டபடி நேற்று மதியம் அந்த சொகுசு கப்பல் மும்பை துறைமுகத்தில் இருந்து சுற்றுலா பயணத்தை தொடங்கியது. அதில் கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் இந்த சொகுசு கப்பலில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் கையும் களவுமாக பிடிக்க மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் முடிவு செய்தார். இதற்காக அவர் தனிப்படையை உருவாக்கினார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 20 அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல மாறுவேடத்தில் அந்த கப்பலில் சென்றனர். அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கப்பலில் டான்ஸ் பார்ட்டி தொடங்கியது. பயணிகளும் உற்சாகமாக நடனமாடினார்கள். அந்த சமயத்தில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது தெரிய வந்தது.

இதனால் உஷாரான போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதை யார் விநியோகம் செய்வது என்பதை மாறுவேடத்தில் இருந்தபடியே ஆய்வு செய்தனர். சுமார் 7 மணி நேரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அந்த கொகுசு கப்பல் முழுவதையும் ஒரு இடம் கூட விடாமல் சோதித்தனர். அப்போது 8 இளைஞர்கள் போதைப் பொருட்களை தொழில் அதிபர்களின் மகன்கள், மகள்களுக்கு கொடுப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 8 பேரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து பண்டல் பண்டலாக கோகைன், கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நடன நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்ததும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஆனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் குற்றவாளிகளை மட்டும் குறிவைத்து பிடித்து தனிமைப்படுத்தினார்கள்.போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள், விநியோகம் செய்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் 13 பேரை மட்டும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கப்பலில் இருந்து வெளியேற்றி மும்பைக்கு அழைத்து வந்தனர். மும்பையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பிடிபட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போதைப் பொருள் விநியோகத்தில் மும்பையைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சுற்றுலா கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய 13 பேர் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவு அவர்கள் விடுமுறை கால கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் தெரிவித்துள்ளார்.மேலும் ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வாங்கி ஆய்வு செய்து வருகின்றனர். ஆரியன் யார் யாருடன் பேசினார்? அவருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் குஜராத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோ போதைப் பொருள் பிடிபட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் விவகாரத்தில் சென்னை கொளப்பாக்கத்தில் வசித்த சுதாகர்- வைசாலி தம்பதிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ரூ.26 ஆயிரம் கோடி போதைப் பொருட்களை அவர்கள் பெயரில் சர்வதேச கும்பல் கடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் மும்பை சுற்றுலா கொகுசு கப்பலில் போதைப் பொருள் விநியோகம் நடந்திருப்பது மும்பையில் உள்ள பிரபலங்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *