தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் ஜனாதிபதி உத்தரவு

Loading

புதுடெல்லி,

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு பஞ்சாப் கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

நாகலாந்து கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாகலாந்து கவர்னர் பதவி அசாம் மாநில கவர்னர் ஜெகதீஷ் முக்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

உத்தரகாண்ட் கவர்னர் பதவி வகித்த பேபி ராணி மவுரியாவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் புதிய கவர்னராக குர்மித் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி (வயது 69) பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்.

1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், இந்திய உளவு அமைப்பு (ஐ.பி.) சிறப்பு இயக்குனராக பணியாற்றி 2012-ல் ஓய்வு பெற்றவர். அதன்பிறகு நாகா பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் பிரதிநிதியாக மத்திய அரசு நியமித்து இருந்தது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வந்த நாகா அமைப்புகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண பாடுபட்டவர்.

2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாகலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *