தமிழகத்தில் செப்.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு- ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை

Loading

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம், தொற்று அதிகரித்தால் எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 5ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும்., வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே அறிவித்தவாறு வழிபாட்டுத் தளங்களுக்கான தடை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய் பரவலின் நிலையை கொண்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்றும்., மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆலோசனையின்படி ஏற்கனவே அறிவித்தவாறு செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியருக்கான அனைத்து அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும். , பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் கொரோனா தொற்று தடுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கேரள மாநிலத்தில் இருந்து கல்வி பயில வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *