தமிழகத்தில் 4 ஆயிரத்து 200 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் மற்றும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், சோழிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிகம்
சி.எஸ்.ஆர். நிதி மூலம் ரூ.1 கோடி செலவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய தடுப்பூசி போடும் மையமும் தொடங்கப்பட்டு உள்ளது.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 98.3 சதவீதம் பேர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை 15 லட்சத்து 74 ஆயிரத்து 477 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை இந்த ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகமான சோதனை செய்யப்பட்ட ஆஸ்பத்திரியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி விளங்குகிறது. தமிழகத்தில் இதுவரை 4 ஆயிரத்து 200 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் இதுவரை 1,714 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 207 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 லட்சத்தை தாண்டும்
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 4 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை இன்று (நேற்று) 5 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.