கட்டமைக்கப்படும் விரைவு சாலைகள் குறித்து அமைச்சரின் பதில்
புதுதில்லி, ஜூலை 19, 2021
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
அமைச்சர் திரு நிதின் ஜெய்ராம் கட்கரி, கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.
தற்சமயம் 2507 கிலோமீட்டருக்கான ஏழு விரைவு சாலைகள் கட்டமைக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. இதில் 440 கிலோமீட்டருக்கான பணிகள் முடிவடைந்து
விட்டன.
கொவிட் பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு நிவாரணங்கள் தொடர்பான
விரிவான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு
வழங்கப்பட்ட கால அளவு நீட்டிப்பு, ஒப்புதல் பெற்ற துணை ஒப்பந்ததாரருக்கு
நேரடியாக கட்டணத்தை செலுத்துதல், தாமதத்திற்கான அபராதம் ரத்து உள்ளிட்டவை
இவற்றில் அடங்கும்.
2002-03 முதல் செயல்படுத்தப்படும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை நிறுவுவதற்கான
நாடு தழுவிய திட்டம் 12-வது ஐந்தாண்டு காலத்தில் (2012-17) வாகன ஓட்டுதல்
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ரூ 17 கோடி
மத்திய அரசு நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கான நிலத் தேவை 10 ஏக்கர் ஆகும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மண்டல ஒட்டுநர் பயிற்சி
நிலையங்கள் அமைப்பதற்கு ரூ 5 கோடி நிதியுதவி மற்றும் 3 ஏக்கர் நிலத் தேவை என
நிர்ணயிக்கப்பட்டது. 14-வது நிதி சுழற்சியில், ரூ 17 கோடி நிதியுதவி என்பது ரூ 18.50
கோடியாக உயர்த்தப்பட்டது.
வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கு தரமான பயிற்சி அளித்து, சாலை மற்றும் சுற்றுச்சூழல்
பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை இந்த திட்டத்தின் அடிப்படை
நோக்கங்களாகும். இதுவரை பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 31
வாகன ஓட்டுதல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 6 மண்டல ஒட்டுநர்
பயிற்சி நிலையங்களுக்கு அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடம் இருந்து
பெறப்பட்ட தகவல்களின் படி 2017-ம் ஆண்டு 1,47,913 நபர்களும், 2018-ம் ஆண்டு
1,51,417 நபர்களும், 2019-ம் ஆண்டு 1,51,113 நபர்களும் சாலை விபத்துகளில்
உயிரிழந்துள்ளனர்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு
மாவட்டத்திலும் ‘நாடாளுமன்ற உறுப்பினரின் சாலை பாதுகாப்பு குழு’-வை சாலைப்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பல்முனை திட்டம் ஒன்றையும்
அமைச்சகம் வகுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தானியங்கி வாகன பரிசோதனை நிலையங்களுக்கான அங்கீகாரம், ஒழுங்குமுறை
மற்றும் கட்டுப்பாட்டிற்காக 2021 ஏப்ரல் 8 அன்று அறிவிப்பு ஒன்றை அரசு
வெளியிட்டது. பழைய வாகனங்களை அழிப்பதற்கான மையங்களை
உருவாக்குவதற்கான அறிவிப்பை 2021 மார்ச் 15 அன்று அரசு வெளியிட்டது.
நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தானியங்கி
வாகன பரிசோதனை மற்றும் அழிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைக்கும் போது நெகிழி கழிவை கட்டாயம்
பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை சாலை போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது வரை, 703 கிலோமீட்டர் நீளத்திற்கான தேசிய நெடுஞ்சாலைகள் நெகிழி கழிவை
பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளன.
பசுமை தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை உருவாக்குவதற்காக உலக வங்கியுடன்
கடன் ஒப்பந்தம் ஒன்றில் அரசு கையெழுத்திட்டுள்ளது. ராஜஸ்தான், ஹிமாச்சலப்
பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 781
கிலோமீட்டருக்கான தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது இத்திட்டத்தில்
அடங்கும்.
மொத்தமுள்ள 781 கிலோமீட்டரில், 287.96 கிலோமீட்டர் பணிக்கான ஒப்புதல் ரூ
1664.44 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பரில் பணிகளை நிறைவு
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.